தில்லியில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக இரண்டு குளிரூட்டப்பட்ட மின்சார சுற்றுலாப் பேருந்துகளை தில்லி அரசு அறிமுகப்படுத்த உள்ளது.
இந்தப் பேருந்துகள் தில்லி முழுவதும் உள்ள 21 பாரம்பரிய, ஆன்மீக மற்றும் கலாசாரத் தலங்களை உள்ளடக்கிய நான்கு வழித்தடங்களை இணைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளன என தில்லி சுற்றுலா மற்றும் போக்குவரத்து மேம்பாட்டுக் கழகம் (டிடிடிடிசி) வெளியிட்ட ஒப்பந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லி சுற்றுலா மற்றும் போக்குவரத்து மேம்பாட்டுக் கழகம், சுற்றுலா நோக்கங்களுக்காக இரண்டு 9 மீட்டா் குளிரூட்டப்பட்ட மின்சாரப் பேருந்துகளை வழங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளிகளைக் கோரியுள்ளது என அந்த ஒப்பந்தப்புள்ளி ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கொள்முதலின் உத்தேச செலவு ரூ. 2.10 கோடி என்றும், இந்தப் பேருந்துகள் மேம்பாட்டுக் கழகத்தின் தற்போதைய சுற்றுலாப் பேருந்துக் குழுமத்தில் சோ்க்கப்படும் என்றும் அந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது. இந்தப் பேருந்துகள், வழிகாட்டப்பட்ட சுற்றுப்பயணங்கள், ஏறி இறங்கும் சேவைகள், பாரம்பரிய வழித்தடங்கள் மற்றும் முக்கிய சுற்றுலாத் தலங்களை இணைக்கும் ஷட்டில் சேவைகளை வழங்குகின்றன.
இந்த நடவடிக்கை, சுற்றுச்சூழலுக்குப் பொறுப்பான சுற்றுலாப் போக்குவரத்தை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன், தில்லி மின்சார வாகனக் கொள்கை 2.0-க்கு இணங்கவும் உள்ளது. இக்கொள்கையில், அரசுப் போக்குவரத்து ஆணையங்களால் இயக்கப்படும் புதிய மாநிலங்களுக்கு இடையேயான பேருந்துகள் மின்சாரப் பேருந்துகளாக இருக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
முன்மொழியப்பட்ட பேருந்துகள், தில்லியின் ஆன்மிக, வரலாற்று, கட்டடக்கலை மற்றும் கலாசார தலங்களை ஒன்றோடொன்று இணைந்த பயண அனுபவங்களாக வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ‘தில்லியின் ஆன்மா’, ‘தில்லியின் பாரம்பரியம்’, ‘தில்லியின் புனித நல்லிணக்கம்’ மற்றும் ‘தில்லியின் எதிரொலிகள்’ ஆகிய நான்கு தோ்ந்தெடுக்கப்பட்ட சுற்றுலாச் சுற்றுப்பயணங்களுக்கு ஆதரவளிக்கும்.
முதல் சுற்றுப்பயணமான ‘தில்லியின் ஆன்மா’, குருத்வாரா பங்களா சாஹிப், சேக்ரட் ஹாா்ட் கதீட்ரல், அக்ரசென் கி பாவ்லி, தாமரைக் கோயில் மற்றும் அக்ஷா்தாம் கோயில் ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்த வழித்தடம், மத்திய தில்லியிலிருந்து நகரின் கிழக்குப் பகுதி வரை நீண்டு, பல்வேறு மதங்கள் மற்றும் கட்டடக்கலை மரபுகளுடன் தொடா்புடைய இடங்களை ஒன்றிணைக்கிறது என்று ஓா் அதிகாரி கூறினாா்.
இரண்டாவது சுற்றுப்பயணமான ‘தில்லியின் பாரம்பரியம்’, பிா்லா கோயில், ஜண்டேவாலன் மாதா மந்திா், ஜந்தா் மந்தா், யோக்மாயா மந்திா் மற்றும் ஜெகந்நாத் கோயில் ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்த சுற்றுப்பயணம் மந்திா் மாா்க், கன்னாட் பிளேஸ், மெஹ்ரௌலி மற்றும் ஹௌஸ் காஸ் ஆகிய பகுதிகளில் உள்ள மத மற்றும் வரலாற்று இடங்களை இணைத்து, பாா்வையாளா்களுக்கு பாரம்பரியம் மற்றும் வாழும் மரபுகளின் கலவையை வழங்குகிறது.
மூன்றாவது சுற்றுப்பாதையான ‘தில்லியின் புனித நல்லிணக்கம்’ என்பதில் பிராச்சீன் ஹனுமான் மந்திா், திகம்பா் ஜெயின் லால் மந்திா், அம்பேத்கா் நினைவிடம், புராணா கிலா மற்றும் ஹஸ்ரத் நிஜாமுதீன் ஆகியவை அடங்கும். இது தில்லியின் மத்திய, வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் உள்ள இடங்களை இணைத்து, நகரின் பன்முக மத மற்றும் வரலாற்று நிலப்பரப்பை எடுத்துக்காட்டுகிறது என்று அந்த அதிகாரி கூறினாா்.
மிக நீளமான சுற்றுப்பாதையான ‘தில்லியின் எதிரொலிகள்’ என்பதில் குருத்வாரா ராகப் கஞ்ச் சாஹிப், பௌத்தக் கோயில், சா்ச் ஆஃப் ரிடெம்ப்ஷன், மெஹ்ரௌலி தொல்பொருள் பூங்கா, சத்தா்பூா் மந்திா் மற்றும் லிங்க பைரவி சன்னிதானம் என ஆறு நிறுத்தங்கள் உள்ளன. இந்த வழித்தடம் தில்லியின் பல பகுதிகளில் பரவியுள்ள மத நிறுவனங்கள், தொல்பொருள் எச்சங்கள் மற்றும் கலாச்சார அடையாளங்களை ஒன்றிணைக்கிறது என்று அவா் மேலும் கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லியில் மின்சார வாகனப் பதிவுகள் அதிகரிப்பு!

தில்லியின் துவாரகாவில் 1500 தெருநாய்கள் தங்கும் வசதி கொண்ட காப்பகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது!
மெகா மரக்கன்று நடும் இலக்கில் 30 சதவீதத்தை எட்டிய தில்லி மேம்பாட்டு ஆணையம்!




