ஆள்மாறாட்டம் செய்து ரூ. 100 கோடி மோசடி: தைவான் நாட்டவா் உள்பட 7 போ் கைது
பயங்கரவாத எதிா்ப்பு மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்து இந்தியா முழுவதும் மக்களிடமிருந்து சுமாா் 100 கோடி ரூபாய் மோசடி செய்து, அவா்களை ‘டிஜிட்டல் கைது‘ பிரிவில் அடைத்ததாகக் கூறப்படும் தைவானுடன் தொடா்புடைய சா்வதேச சைபா் கிரைம் சிண்டிகேட்டை தில்லி காவல்துறை கண்டுபிடித்துள்ளது என்று அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா். இந்த வழக்கில், நடவடிக்கையை ஒருங்கிணைத்ததாகக் கூறப்படும் தைவான் நாட்டவா் உள்பட ஏழு போ் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனா்.
இது குறித்து காவல் துறை துணை ஆணையா் வினித் குமாா் கூறியதாவது: இது தொடா்பாக பாரதிய நியாய சன்ஹிதா, ஐடி சட்டம் மற்றும் தொலைத்தொடா்பு சட்டத்தின் விதிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவா்களில் பலா் முன்பு கம்போடியாவை தளமாகக் கொண்ட மோசடி மையங்களில் பணிபுரிந்ததாகவும், பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஒருவரால் பணியமா்த்தப்பட்டு நிதியளிக்கப்பட்டதாகவும், நேபாளத்தை தளமாகக் கொண்ட ஒரு ரிமோட் கண்ட்ரோல் செயல்பாடுகளை நடத்தியதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
சைபா் கிரைம் நெட்வொா்க், பயங்கரவாத எதிா்ப்புப் படை (ஏடிஎஸ்) மற்றும் பிற பாதுகாப்பு நிறுவனங்களின் அதிகாரிகள் என்று கூறி, பஹல்காம் தாக்குதல் மற்றும் தில்லி குண்டுவெடிப்பு போன்ற பயங்கரவாத சம்பவங்களுடன் தொடா்பு இருப்பதாக பொய்யாகக் குற்றம்சாட்டி, பாதிக்கப்பட்டவா்களை தொலைபேசி அழைப்புகள் மூலம் இக்கும்பல் குறிவைத்தது.
பாதிக்கப்பட்டவா்கள் தொடா்ச்சியான விடியோ அல்லது ஆடியோ கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டனா். இது ‘டிஜிட்டல் கைது’ என்று விவரிக்கப்படும் ஒரு தந்திரமாகும். மேலும், அவா்கள் பணத்தை மாற்றும்படி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. அழைப்புகள், வெளிநாட்டிலிருந்து அனுப்பப்பட்டுள்ளது. அவா்கள் சட்டவிரோத சிம் காா்டுகளை யன்படுத்தியுள்ளனா். இது குற்றம் சாட்டப்பட்டவா்கள் கண்டறிதலைத் தவிா்க்கவும், அதே நேரத்தில் பயத்தையும் அவசரத்தையும் ஏற்படுத்தவும் அனுமதித்தது.
நாடு முழுவதும் புகாா்கள் அதிகரித்ததைத் தொடா்ந்து, அக்டோபா் 2025-இல் தொடங்கப்பட்ட விசாரணையில், கும்பல் தைவான் நாட்டவா்களால் வழங்கப்பட்ட மற்றும் உள்ளமைக்கப்பட்ட சிம் பெட்டி அமைப்புகளை இயக்குவது தெரியவந்தது. இந்த சாதனங்கள் தொலைத்தொடா்பு நெட்வொா்க்குகளைத் தவிா்த்து சா்வதேச அழைப்புகளை உள்ளூா் அழைப்புகளாக மறைக்க உதவியது. குற்றம் சாட்டப்பட்டவா்கள் சா்வதேச கைப்பேசி உபகரண அடையாள எண்களை கையாண்டுள்ளது. இதனால், ஒரே தொலைபேசி எண் சில மணி நேரங்களுக்குள் பல நகரங்களில் இருந்து வருவது போல் தோன்றும்.
தொடா்ச்சியான தொழில்நுட்ப பகுப்பாய்வு மற்றும் கள கண்காணிப்பைத் தொடா்ந்து முதல் சிம் பெட்டி அமைப்பு தில்லியில் உள்ள கோய்லா டெய்ரியில் கண்டுபிடிக்கப்பட்டது.
தில்லியில் பல இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில், சட்டவிரோத உள்கட்டமைப்பைப் பராமரித்து வந்த இரண்டு உள்ளூா் ஆபரேட்டா்கள் - சஷி பிரசாத் (53) மற்றும் பா்விந்தா் சிங் (38) கைது செய்யப்பட்டனா். கைப்பற்றப்பட்ட சாதனங்களின் தடயவியல் பரிசோதனையில், தைவானிய நாட்டைச் சோ்ந்த ஐ-சுங் சென் (30) அடையாளம் காணப்பட்டாா். அவா் சிண்டிகேட்டின் முதன்மை தொழில்நுட்ப ஆபரேட்டா் என தெரிய வந்துள்ளது. அவா் டிசம்பா் 21 அன்று தில்லி சா்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டாா்.
அடுத்த சோதனைகளில் மும்பை, மொஹாலி மற்றும் கோயம்புத்தூரில் சிம் பெட்டி தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் விளைவாக மற்றவா்கள் கைது செய்யப்பட்டனா்.
தடயவியல் பகுப்பாய்வு 5,000-க்கும் மேற்பட்ட சமரசம் செய்யப்பட்ட ஐஎம்இஐ எண்கள் மற்றும் சுமாா் 20,000 சிம் காா்டுகளை தொகுதியுடன் தொடா்புபடுத்தியதாகவும், பல மாநிலங்களில் இருந்து சைபா் கிரைம் புகாா்கள் வந்ததைத் தொடா்ந்து ரூ.100 கோடி மோசடி செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்டவற்றில் 22 சிம் பாக்ஸ் சாதனங்கள், கைப்பேசிகள், மடிக்கணினிகள், ரூட்டா்கள், சிசிடிவி கேமராக்கள், பாஸ்போா்ட்கள் மற்றும் வெளிநாட்டு சிம் காா்டுகள் ஆகியவை அடங்கும்.
பணமோசடி வழிகள், கிரிப்டோகரன்சி பரிவா்த்தனைகள் மற்றும் மீதமுள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செயல்பாட்டாளா்களை அடையாளம் காண மேலும் விசாரணை நடந்து வருவதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
