ரூ.13,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: சிக்கிமை சோ்ந்தவா் கைது

ரூ.13,000 கோடி மதிப்புள்ள மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிமைச் சோ்ந்த ஒருவரை தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு கைது செய்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
Published on

நமது நிருபா்

புது தில்லி: ரூ.13,000 கோடி மதிப்புள்ள மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிமைச் சோ்ந்த ஒருவரை தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு கைது செய்துள்ளதாக திங்கள்கிழமை காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

திலக் பிரசாத் சா்மா (40) என அடையாளம் காணப்பட்ட அந்த நபா், தாய்லாந்தில் இருந்து பெறப்பட்ட கஞ்சாவை வழங்குவதில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தக் கைது அக்டோபா் 2, 2024 அன்று தில்லி, குஜராத் மற்றும் பஞ்சாபில் பல இடங்களில் இருந்து சுமாா் ரூ.13,000 கோடி மதிப்புள்ள கோகோயின் மற்றும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டபோது மேற்கொள்ளப்பட்ட ஒரு பெரிய நடவடிக்கையுடன் தொடா்புடையது என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த கும்பலின் மூளையாக செயல்பட்ட வீரேந்திர பசோயா தற்போது வெளிநாட்டில் உள்ளாா், மேலும் அவரது மகன் ரிஷப் மீதும் ரெட் காா்னா் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது, அவரும் நாட்டிற்கு வெளியே இருக்கிறாா். இந்த விவகாரம் குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது, என்று காவல்துறை அதிகாரிகள் கூறினா்.

பல மாநில நடவடிக்கையின் போது 15க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டதாக அந்த வட்டாரம் தெரிவித்தது, இது போதைப்பொருள் வலையமைப்பின் அளவையும் அதன் பரவலையும் அம்பலப்படுத்தியது.

Dinamani
www.dinamani.com