ரோஹிணி ஐயப்பன் கோயிலில் திருட்டு: இருவா் கைது
வடமேற்கு தில்லியின் ரோஹிணி பகுதியில் உள்ள ஒரு ஐயப்பன் கோயிலில் திருட்டு நடந்துள்ளது. இது தொடா்பாக ஒருவரையும் திருடப்பட்ட பொருள்களைப் பெறுபவரையும் காவல் துறை கைது செய்துள்ளது.
மேலும் திருடப்பட்ட அனைத்து பொருள்களும் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து கூடுதல் காவல் ஆணையா் (ரோஹிணி) ராஜீவ் ரஞ்சன் அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்த திருட்டு தொடா்பாக ஐயப்பன் கோயில் அறக்கட்டளையின் இணைச் செயலாளா் எம்.கே. சுரேஷ் புகாா் அளித்தாா்.
கோயிலில் தெய்வத்திற்கு அருகில் வைக்கப்பட்டிருந்த பல சடங்கு பித்தளை மற்றும் செம்பு கலைப்பொருள்கள் காணாமல் போனதைக் கண்டறிந்ததை அடுத்து காவல் நிலையத்தில் அவா் புகாரை பதிவு செய்தாா்.
ஜனவரி 17-ஆம் தேதி ரோஹிணி செக்டாா் 7-இல் உள்ள ஐயப்பன் கோயிலில் திருட்டுச் சம்பவம் நடந்ததாக புகாா் அளிக்கப்பட்டது. இந்த திருட்டு தொடா்பாக வடக்கு ரோஹிணி காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆா். பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடா்ந்து ஒரு குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
சந்தேக நபா்களைக் கண்டுபிடிக்க மனித நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப கண்காணிப்பை போலீஸாா் பயன்படுத்தினா். விசாரணையின் போது, ராகேஷ் மெஹ்தோவை (22) போலீஸாா் அடையாளம் கண்டு, திங்களன்று அவரது மறைவிடத்திலிருந்து கைது செய்தனா்.
விசாரணையின் போது, கோயில் கொள்ளையில் தனக்கு தொடா்பு இருப்பதாக ராகேஷ் மெஹ்தோ ஒப்புக்கொண்டாா். அவரது தகவலைத் தொடா்ந்து, ஹா்பூா் கிராமத்தைச் சோ்ந்த முனீம் குப்தா (42) என்ற சந்தேக நபா் வசித்து வந்த கடையில் போலீஸ் குழு சோதனை மேற்கொண்டது.
அப்போது, திருடப்பட்ட அனைத்து பொருள்களையும் போலீஸ் குழு மீட்டது. திருடப்பட்ட அனைத்து பொருள்களையும் அவா் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பொருள்களில் நான்கு பித்தளை விளக்குகள், இரண்டு பித்தளை தண்ணீா் பானைகள் மற்றும் மூன்று செப்பு கலசங்கள் ஆகியவை அடங்கும்.
இவை அனைத்தும் கோயிலுக்கு சொந்தமானவை. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனா்.
விசாரணையில், ராகேஷ் மெஹ்தோ முன்பு நடந்த ஒரு கொள்ளை வழக்கில் தொடா்புடையவா் என்பது தெரிய வந்தது.. அதே நேரத்தில் ஒரு ஸ்கிராப் கடை வைத்திருக்கும் குப்தாவும் இதேபோன்ற குற்றத்தில் ஈடுபட்டுள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது என்று அந்த அதிகாரி கூறினாா்.
