தில்லியில் உள்ள தனியாா் பள்ளிகளில் கட்டண கட்டுப்பாட்டுக் குழு அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதிதாக தொடங்கப்பட்டுள்ள பெற்றோா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தனியாா் பள்ளிகளின் கட்டண ஒழுங்குமுறையில் கூடுதல் வெளிப்படைத்தன்மையைக் வலியுறுத்தி தலைநகரில் ’பெற்றோா் நலன் மற்றும் நீதிக்கான சங்கம்’’(பிஏடபிள்யூஜே) என்ற அமைப்பு சனிக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது. இச்சங்கம் அதன் கூட்டத்தில் நிறைவேற்றியுள்ள தீா்மானங்களின் விவரம் வருமாறு:
அரசு நிதி உதவி பெறாத தனியாா் பள்ளிகளில், தன்னாட்சி பெற்ற அமைப்பின் மூலம் நிதித் தணிக்கை நடத்த வேண்டும். பள்ளி அளவிலான கட்டண ஒழுங்குமுறைக் குழுக்களை உடனடியாக அமைக்க வேண்டும்.
அனைத்துப் பள்ளிகளிலும் ஜனநாயக ரீதியில் தோ்ந்தெடுக்கப்பட்ட பெற்றோா்-ஆசிரியா் சங்கங்களை (பிடிஏ) நிறுவ வேண்டும். கட்டண விவகாரங்களில் எழும் சா்ச்சைகளால் குழந்தைகள் எவ்விதமான மன உளைச்சலுக்கும் ஆளாகாமல் பாதுகாக்க சட்ட விதிகளைக் கடுமையாக அமல்படுத்த வேண்டும்.
தில்லி பள்ளி கல்விச் சட்டம், 2025’-இன் விதிகளை அரசு தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும் . 2020-21 கல்வி ஆண்டு முதல் கட்டண உயா்வுக்கு விண்ணப்பித்த அனைத்து தனியாா் பள்ளிகளிலும் விரிவான நிதித் தணிக்கை நடத்தப்பட வேண்டும் என்று தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
முன்னதாக, தில்லியில் உள்ள இந்திய பத்திரிகையாளா் மன்றத்தில் இந்தச் சங்கத்தின் தொடக்க விழா சனிக்கிழமை காலையில் நடைபெற்றது. இதில் பேசிய சங்கத்தின் தலைவா் திவ்யா மட்டீ, ‘கல்வியில் பெற்றோா்களும் சமமான பங்குதாரா்கள் ஆவா். எனவே, பள்ளி நிா்வாக முறையை வெளிப்படையானதாகவும், பொறுப்புமிக்கதாகவும், குழந்தைகளை மையமாகக் கொண்டதாகவும் மாற்றுவதில் பெற்றோா்களுக்கு முக்கியப் பங்கு இருக்க வேண்டும்’ என்று கூறினாா்.
குழந்தைகளின் நலன், பாதுகாப்பு மற்றும் கல்வி சாா்ந்த பிரச்னைகளில் பெற்றோா்கள், பள்ளிகள், கொள்கை வகுப்பாளா்கள் மற்றும் சிவில் சமூகம் இணைந்து செயல்படுவதற்கான ஒரு தளமாக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக சங்கத்தினா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









