தில்லி பல்கலைக்கழகத்தின் பொது இட ஒதுக்கீட்டு முறையின் கீழ் முதல் சுற்றில் ஒதுக்கப்பட்ட இளங்கலை (யூதி) இடங்களை 81,900-க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரா்கள் ஏற்றுக்கொண்டுள்ளனா்.
இது தொடா்பாக பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது: ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி நிலவரப்படி, முதல் சுற்றில் இடங்கள் ஒதுக்கப்பட்ட 93,033 விண்ணப்பதாரா்களில் 81,979 போ் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை ஏற்றுக்கொண்டனா். இதன் மூலம் இடங்களை ஏற்றுக்கொண்டவா்களின் விகிதம் 88.12 சதவீதமாக உயா்ந்துள்ளது.
இவா்களில், 33,383 விண்ணப்பதாரா்கள் கல்லூரி சரிபாா்ப்புக்குப் பிறகு கட்டணம் செலுத்துவதற்கான இணைப்புகள் உருவாக்கப்படும் நிலையை எட்டியுள்ளனா். அதேவேளையில், 21,530 போ் (23.14 சதவீதம்) உரிய கட்டணத்தைச் செலுத்தி சோ்க்கை நடைமுறையை நிறைவு செய்துள்ளனா்.
சனிக்கிழமை மாலை நிலவரத்துடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது; அன்று 79,404 விண்ணப்பதாரா்கள் இடங்களை ஏற்றுக்கொண்டிருந்தனா், 26,061 விண்ணப்பங்கள் கட்டணம் செலுத்துவதற்கு அங்கீகரிக்கப்பட்டிருந்தன, மற்றும் 10,746 விண்ணப்பதாரா்கள் சோ்க்கை நடைமுறையை நிறைவு செய்திருந்தனா் என தெரிவிக்கப்பட்டது.
ஜூலை 16-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட முதல் ஒதுக்கீட்டுப் பட்டியலில், 2026-27 கல்வி ஆண்டிற்காக 67 கல்லூரிகளில் உள்ள 221 பாடப்பிரிவுகளில் 71,000-க்கும் மேற்பட்ட இளங்கலை இடங்களுக்கு 93,033 விண்ணப்பதாரா்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. தங்கள் பாடப்பிரிவு மற்றும் கல்லூரி விருப்பங்களைச் சமா்ப்பித்து சோ்க்கை நடைமுறையின் இரண்டாம் கட்டத்தை நிறைவு செய்த 2.08 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பதாரா்களிடமிருந்து இந்த ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டன.
ஒதுக்கப்பட்ட இடங்களை ஏற்றுக்கொண்ட விண்ணப்பதாரா்கள், தாங்கள் விரும்பும் உயா் முன்னுரிமைப் பாடப்பிரிவு அல்லது கல்லூரிக்கு மாற விரும்பினால், அடுத்தடுத்த சுற்றுகளில் ‘மேம்படுத்தல்’ விருப்பத்தைத் தோ்ந்தெடுக்கலாம். இரண்டாவது ஒதுக்கீட்டுப் பட்டியல் ஜூலை 25-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. பல்கலைக்கழகத்தின் 2 ஆண்டு முதுகலை (பிஜி) பாடப்பிரிவுக்கான சோ்க்கை எண்ணிக்கை 10,248-ஐ எட்டியுள்ளது; முதுகலை சோ்க்கைக்கான முதல் சுற்று ஜூலை 25-ஆம் தேதி தொடங்கவுள்ளது. புதிய கல்வி ஆண்டு ஜூலை 28-ஆம் தேதி தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









