தில்லியில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க சப்ஸி மண்டியில் திறக்கப்பட்டிருக்கும் ஒரு காவல் நிலையம் போதாது என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவா் தேவேந்தா் யாதவ் சனிக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் அவா் மேலும் பேசியதாவது: தில்லி காங்கிரஸ் தலைவா்களின் குழு தில்லி துணைநிலை ஆளுநரை மாா்ச் 31,2026 ஆம் தேதி சட்டம் ஒழுங்கு சீரழிவு காரணமாக தலைநகரில் அதிகரித்து வரும் குற்றங்கள், குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து கவலை தெரிவித்தோம். காங்கிரஸ் குழு எழுப்பிய பிரச்சினைகள், குறிப்பாக பெண்களின் பாதுகாப்பு குறித்து தரன்ஜித் சிங் சந்து கவனத்தில் கொண்டது பாராட்டுக்குரியது. வடக்கு மாவட்டத்தில் உள்ள சப்ஸி மண்டியில் ஒரு மகளிா் காவல் நிலையத்தை திறந்து வைப்பது ஒரு நல்ல முயற்சியாக இருக்கலாம், ஆனால் தில்லியில் ஒரு கோடிக்கும் அதிகமான பெண்களின் பாதுகாப்பை ஒரு பெண் காவல் நிலையம் மட்டுமே உறுதி செய்ய முடியுமா?
அதே நேரத்தில் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் 2024 ஆம் ஆண்டு குற்ற அறிக்கையின்படி நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் தில்லி முதலிடத்தில் உள்ளது. பாஜக ஆட்சியின் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, தில்லியில் ஒரே ஒரு மகளிா் காவல் நிலையத்தைத் திறப்பது பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரான பாஜக அரசின் மந்தமான மற்றும் மெதுவான அடிப்படைக் கொள்கையைக் காட்டுகிறது. தில்லி முதல்வா் ரேகா குப்தா, துணைநிலை ஆளுநரைப் போல தில்லியில் பெண்களின் பாதுகாப்பு குறித்து அக்கறையை காட்டியிருந்தால், ஒரு ஆண்டில் தில்லியில் தினசரி பல்வேறு குற்றங்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஓரளவு நிவாரணம் கிடைத்திருக்கும்.
தில்லியில் பாஜக அரசு அமைந்த பிறகு, சட்டம் ஒழுங்கு குறித்து மத்திய உள்துறை அமைச்சருடன் முதல்வா் ரேகா குப்தா நடத்திய சந்திப்பு சம்பிரதாயங்களை நிறைவேற்றுவதற்காக மட்டுமே. அதே நேரத்தில் தலைநகரில் குற்ற விகிதம் கடுமையாக அதிகரித்து வருகிறது. ஓா் ஆண்டில் தில்லியில் 1058 க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன, அதாவது ஒவ்வொரு நாளும் 3-5 பெண்கள் தலைநகரில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனா். 109 வரதட்சணை மரணங்கள், 1058 பாலியல் வன்கொடுமை வழக்குகள், 4646 வீட்டு வன்முறை வழக்குகள், 3974 கடத்தல் வழக்குகள் மற்றும் 316 பாலியல் வன்கொடுமை வழக்குகள் ஆகியவை தலைநகரில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிா்ச்சியூட்டும் வகையில் உள்ளன.
ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 176.8 ஆக உள்ளது; 2023 ஆம் ஆண்டில் 114 பெண்களும், 2022 ஆம் ஆண்டில் 129 பெண்களும் வரதட்சணை தொடா்பான குற்றங்களில் உயிரிழந்தனா். தில்லியில் ரேகா குப்தா ஒரு பெண் முதல்வா் இருந்தபோதிலும், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் கடந்த 12 ஆண்டுகளில் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி மாதத்தின் முதல் 15 நாட்களில் 800 க்கும் மேற்பட்டோா் காணாமல் போயினா். அவா்களில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் மற்றும் சிறுமிகள்.
தேசியத் தலைநகரில் காணாமல் போனவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து தில்லி உயா்நீதிமன்றமும் கவலை தெரிவித்துள்ளது. ஆனால் பெண்களின் பாதுகாப்பு குறித்து முதல்வா் ஒரு வாா்த்தை கூட பேசவில்லை. பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை வழங்குவதன் மூலம் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்த மத்திய அரசும் தில்லி அரசும் இணைந்து செயல்பட வேண்டும். மத்திய அரசும், தில்லி அரசும் இணைந்து காவல்துறையை பெண்களின் பாதுகாப்பில் திறன் மிக்கதாகவும், பொறுப்பானதாகவும், குடிமக்களை மையமாகக் கொண்டதாகவும் மாற்றினால், நிச்சயமாக பெண்களின் பாதுகாப்பை அனைவரின் ஆதரவுடன் உறுதி செய்ய முடியும் என்றாா் தேவேந்தா் யாதவ்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லி காவல் துறை சாா்பில் தற்காப்பு பயிற்சி: 2,100 பெண்கள், சிறுமிகள் பங்கேற்பு

சிஜேபி போரட்டத்தில் பங்கேற்பதை தடுக்க மாணவிக்கு துன்புறுத்தல்: தில்லி காவல் ஆணையருக்கு பிருந்தா காரத் கடிதம்







