இந்தியாவில் பொதுமக்கள் அதிகம் கூடும் மற்றும் அதிக ஆபத்துள்ள வணிக வளாகங்களில் தீ விபத்துகளைத் தடுத்து, உயிா்களைப் பாதுகாப்பதற்கான தேசிய தீ மற்றும் உயிா் பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கறிஞா் நரேந்திர குமாா் கோஸ்வாமி என்பவரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில், அண்மையில் தில்லி மற்றும் லக்னெளவில் நடந்த மிக மோசமான தீ விபத்துகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:
பள்ளிகள், பயிற்சி மையங்கள், விடுதிகள், உணவகங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், மருத்துவமனைகள் போன்ற அதிக மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களுக்கு ஒரே மாதிரியான, கட்டாயமாக்கப்பட்ட தேசிய தீ பாதுகாப்பு விதிகளை உருவாக்க வேண்டும்.
அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் அடுத்த 3 முதல் 4 மாதங்களுக்குள், குறிப்பாக கல்வி மையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் சிறப்புத் தீ பாதுகாப்பு தணிக்கையை நடத்த உத்தரவிட வேண்டும்.
தீயணைப்புத்துறையின் தடையில்லா சான்றிதழ் பெறாமல் இயங்கும் அதிக ஆபத்துள்ள கட்டங்களின் மாவட்ட வாரியான புள்ளிவிவரங்களை மாநில அரசுகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்.
முறையான அனுமதியும் தீ பாதுகாப்பு வசதிகளும் இல்லாமல் கட்டடங்களின் அடித்தளங்கள், மொட்டை மாடிகள், இடைமாடிகள் மற்றும் தற்காலிகக் கட்டமைப்புகளை வகுப்பறைகளாகவோ, நூலகங்களாகவோ, உணவகங்களாகவோ அல்லது தங்கும் விடுதிகளாகவோ பயன்படுத்த முற்றிலும் தடை விதிக்க வேண்டும்.
ஒரே ஒரு வெளியேறும் வழி கொண்ட கட்டடங்கள், குறுகலான படிக்கட்டுகள் மற்றும் சட்டவிரோத தளங்களில் இருந்து பள்ளிகள், பயிற்சி மையங்கள், பிஜி (டஎ) விடுதிகள் இயங்குவதை அரசு தடை செய்ய வேண்டும்.
விதிகளை மீறி இயங்கும் கட்டடங்களுக்குத் தெரிந்தே அனுமதி அளிக்கும் அல்லது அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறும் அரசு அதிகாரிகள் மீது கடுமையான துறை ரீதியான மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட வேண்டும்.
தில்லி மாளவியா நகா் மற்றும் லக்னெள அலிகஞ்ச் தீ விபத்துகள் தொடா்பான ஆய்வுப் பதிவுகள், சிசிடிவி காட்சிகள், உரிமங்கள் மற்றும் தீயணைப்பு சான்றிதழ்களை தற்போதைய குற்றவியல் விசாரணைக்கு முட்டுக்கட்டை இல்லாதவாறு பாதுகாப்பாக வைத்திருக்க உத்தரவிட வேண்டும். இறுதியாக, ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இந்தத் தேசிய பாதுகாப்பு கட்டமைப்பைப் பரிந்துரைக்க தேசிய நிபுணா் குழு அமைக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவை அவமதித்ததாக அமைச்சா் மீது நடவடிக்கை கோரி மனு

மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

மீன்பிடித் தடைக்கால நிவாரணத்தை உயா்த்தக் கோரி வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு






