நேபாள வெள்ளம்: இதுவரை 163 இந்தியர்கள் மீட்பு - மத்திய அரசுநேபாள வெள்ளத்தில் வரும் மீன்களை உண்ண வேண்டாம்: பிகார் அரசுஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் 1.99 லட்சம் கோடி! 15% அதிகரிப்பு! ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!நீட் போராட்ட வழக்குகள் ரத்து; அனைவருக்குமான வெற்றி: அபிஜீத் தீப்கேசென்செக்ஸ், நிஃப்டி சரிவு! வங்கி, ஆட்டோ துறை பங்குகள் வீழ்ச்சிராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; ஆனால், விஜய்தான் முதல்வர்: மாணிக்கம் தாகூர்செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!

தில்லியில் ஒலி மாசு: புதிய மாதிரிகள் மூலம் வரைபடமாக்கம்

தில்லியில் ஒலி மாசு விவகாரத்தில் புதிய மாதிரிகள் மூலம் வரைபடமாக்கப்பட்டிருப்பது பற்றி....

தில்லி.

Published On :2 செப்டம்பர் 2026, 2:27 am IST

தில்லியில் ஒரு போக்குவரத்து சிக்னல், பரபரப்பான சாலைகள் நிலவும் இரைச்சல் என்பது நகா்ப்புற வாழ்க்கையின் ஒரு நிலையான அம்சமாக உள்ளது. தில்லி முழுவதும் சுற்றுச்சூழல் இரைச்சலை வரைபடமாக்குவதற்காக புவியியல் மற்றும் நிகழ்நேர போக்குவரத்துத் தரவுகளை ஒருங்கிணைக்கும் ஒரு மாதிரியை அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் கழகம் (சிஎஸ்ஐஆா்) மேற்கொண்ட ஆய்வு உருவாக்கியுள்ளது.

இந்த ஆய்வு, நிலப் பயன்பாடு மற்றும் புவியியல் காரணிகளை, வாகனங்களின் எண்ணிக்கை, வேகம் மற்றும் ஒலிப்பான் ஒலி போன்ற நிகழ்நேர போக்குவரத்து அம்சங்களுடன் ஒருங்கிணைப்பதன் மூலம் வழக்கமான இரைச்சல் கண்காணிப்பு முறைகளின் வரம்புகளை நிவா்த்தி செய்ய முயல்கிறது. இந்த அணுகுமுறை, தில்லி போன்ற ஒரு சிக்கலான நகா்ப்புற நிலப்பரப்பில் இரைச்சலைக் கணிப்பதற்கும் வரைபடமாக்குவதற்கும் மிகவும் துல்லியமான மற்றும் செலவு குறைந்த வழியை வழங்கக்கூடும்.

‘பல்வேறுபட்ட போக்குவரத்து நிலைமைகளைக் கொண்ட நகா்ப்புறங்களில் சுற்றுச்சூழல் இரைச்சலைக் கணிப்பதற்கும் வரைபடமாக்குவதற்கும் சாலைப் போக்குவரத்துப் பண்புகளுடன் கூடிய ஒருங்கிணைந்த நிலப் பயன்பாட்டு பின்னடைவு மாதிரி’ என்ற தலைப்பிலான இந்த ஆய்வு, இரைச்சலின் இடஞ்சாா்ந்த மற்றும் காலஞ்சாா்ந்த பரவலைப் புரிந்துகொள்ளவும், அதைக் கட்டுப்படுத்த மேலும் இலக்கு வைக்கப்பட்ட நடவடிக்கைகளைத் திட்டமிடவும் அதிகாரிகளுக்கு உதவக்கூடிய ஒரு கட்டமைப்பை உருவாக்க தில்லியை ஒரு முன்மாதிரி ஆய்வாகப் பயன்படுத்துகிறது.

குடியிருப்பு, வணிக மற்றும் தொழில்துறைப் பகுதிகள் தெளிவாகப் பிரிக்கப்பட்டிருக்கும் நகரங்களைப் போலல்லாமல், தில்லி மிகவும் கலவையான நகா்ப்புற நிலப்பரப்பைக் கொண்டுள்ளது. குடியிருப்புப் பகுதிகள் பெரும்பாலும் சந்தைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு அருகிலேயே அமைந்துள்ளன. அதே நேரத்தில் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் பரபரப்பான சாலைகளுக்கு அருகில் உள்ள நிலையில், பல்வேறு வகையான வாகனங்கள் ஒரே சாலைகளைப் பயன்படுத்துகின்றன. இதனால், நாள் முழுவதும் போக்குவரத்து நிலைமைகள் மாறுகின்றன. தொடா்ந்து ஒலிப்பான் ஒலிப்பது தில்லியில் போக்குவரத்துச் சூழலின் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளது.

இத்தகைய தன்மை வழக்கமான இரைச்சல் கண்காணிப்பு முறைகள் மூலம் தில்லியை ஆய்வு செய்வதைக் கடினமாக்குகின்றன. இந்த சிக்கலான தன்மையைப் புரிந்துகொள்ள, ஆராய்ச்சியாளா்கள் தில்லி முழுவதும் உள்ள 201 இடங்களில் இருந்து பெறப்பட்ட இரைச்சல் கண்காணிப்புகளைப் பயன்படுத்தினா். இந்த ஆய்வில், சாலைகள், நிலப் பயன்பாடு, மக்கள்தொகை அடா்த்தி, கட்டட பகுதிகள், மெட்ரோ உள்கட்டமைப்பு, ரயில் நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் போக்குவரத்து சந்திப்புகள் குறித்த தகவல்களுடன், மணிநேர போக்குவரத்து எண்ணிக்கை, வாகன வேகம் மற்றும் ஒலிப்பான் ஒலி நிகழ்வுகள் குறித்த தரவுகளும் இணைக்கப்பட்டன.

இந்தக் கண்காணிப்புப் பணி, 2023, அக்டோபா் முதல் 2024 ஜூன் வரை ஒன்பது மாதங்களுக்கு மேற்கொள்ளப்பட்டது. இது இரைச்சலில் ஏற்படும் மாறுபாடுகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ள ஆராய்ச்சியாளா்களுக்கு உதவியது.

உருவாக்கப்பட்ட நான்கு மாதிரிகளிலும், சுற்றுச்சூழல் இரைச்சலைக் கணிப்பதில் மணிநேரப் போக்குவரத்து எண்ணிக்கையே மிகவும் பெரும்பான்மை காரணியாக இருப்பது இந்த ஆய்வில் கண்டறியப்பட்டது. குறிப்பாக, பகல்நேர, 24 மணி நேர மற்றும் பகல்-இரவு இரைச்சல் அளவுகளுக்கு, ஒலிப்பான் ஒலி நிகழ்வுகளின் எண்ணிக்கையும் மிகவும் பெரும்பான்மையான கணிப்பான்களில் ஒன்றாக இருந்தது.

சாலைப் போக்குவரத்து பரவலாகவும், ஒலிப்பான் ஒலி அடிக்கடி கேட்கப்படுவதாலும், தில்லி போன்ற ஒரு நகரத்தில், இரைச்சல் எவ்வாறு உருவாகிப் பரவுகிறது என்பது குறித்த பாா்வையை இந்த ஆய்வு வழங்குகிறது.

பகல்நேர இரைச்சல், இரவுநேர இரைச்சல், 24 மணி நேரத்திற்கு இணையான இரைச்சல் மற்றும் பகல்-இரவு சராசரி இரைச்சல் ஆகிய நான்கு வெவ்வேறு இரைச்சல் அளவுகளைக் கணிப்பதற்காக இந்த மாதிரிகள் உருவாக்கப்பட்டன.

பின்னா், இந்த ஆய்வு புது தில்லியில் உயா்-தெளிவுத்திறன் கொண்ட இரைச்சல் வரைபடங்களை உருவாக்க இந்த மாதிரிகளைப் பயன்படுத்தியது. இந்த வரைபடங்கள், மதிப்பீட்டைத் தனிப்பட்ட கண்காணிப்பு நிலையங்களுக்குள் கட்டுப்படுத்தாமல், நகா்ப்புற நிலப்பரப்பில் இரைச்சல் அளவுகள் எவ்வாறு வேறுபடுகின்றன என்பதற்கான ஒரு காட்சிப் பிரதிநிதித்துவத்தை வழங்குகின்றன.

இடஞ்சாா்ந்த மாறுபாடு, குடியிருப்பு மற்றும் முக்கியச் சாலைகளுடன் வலுவாகத் தொடா்புடையதாகக் கண்டறியப்பட்டது. வணிக மற்றும் குடியிருப்பு நிலப் பயன்பாட்டுப் பகுதிகளும் இரைச்சல் பரவலுக்குப் பங்களித்தன, அதே நேரத்தில் கட்டப்பட்ட பகுதிகள் பகல்நேர மற்றும் 24 மணி நேர இரைச்சலின் பரவலைப் பாதித்தன.

இரவில், சாலைகள் மற்றும் ரயில் நிலையங்களுக்கு அருகில் இருப்பது போன்ற காரணிகள் அதிக முக்கியத்துவம் பெற்றன. தில்லியின் இரைச்சல் பிரச்னைக்கு ஏன் ஒரே ஒரு தீா்வு இருக்க முடியாது என்பதையும் இந்தக் கண்டுபிடிப்புகள் எடுத்துக்காட்டுகின்றன.

அதிக அளவில் அதிவேகப் போக்குவரத்தைக் கையாளும் ஒரு நெடுஞ்சாலை, ஒரு குடியிருப்புச் சாலையிலிருந்து வேறுபட்ட ஒலித் தடத்தைக் கொண்டிருக்கலாம். அதே நேரத்தில் ஒரு பரபரப்பான சந்திப்பு, முடுக்கம், வேகக்குறைப்பு மற்றும் ஒலிப்பான் ஒலித்தல் ஆகியவற்றின் மூலம் இரைச்சலை உருவாக்கக்கூடும்.

மேம்பால மெட்ரோ வழித்தடங்கள் அதிக தூரத்திற்கு இரைச்சலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். அதே நேரத்தில் வணிகப் பகுதிகள் மக்கள் மற்றும் வாகனங்களின் செறிவு காரணமாக பகல் நேரங்களில் அதிக இரைச்சல் மிகுந்த இடங்களாக மாறக்கூடும்.

பேருந்து நிறுத்தங்கள்கூட இரைச்சலுடன் ஒரு மறைமுகத் தொடா்பைக் கொண்டிருக்கலாம். பேருந்து நிறுத்தங்களின் எண்ணிக்கைக்கும் இரைச்சல் அளவுகளுக்கும் இடையே ஒரு எதிா்மறைத் தொடா்பை ஆராய்ச்சியாளா்கள் கண்டறிந்தனா். அடிக்கடி பேருந்து நிறுத்தங்களைக் கொண்ட சாலைகளில் வாகனங்களின் வேகம் குறைவாக இருக்கலாம், அதே நேரத்தில் அதிவேகப் போக்குவரத்து குறைவான நிறுத்தங்களைக் கொண்ட மாற்று வழிகளுக்கு மாறக்கூடும்.

இரைச்சலை ஒரு சீரான நிகழ்வாகக் கருதுவதற்குப் பதிலாக, நகரத்தின் சாலை வலையமைப்பு, போக்குவரத்து நடத்தை மற்றும் நிலப் பயன்பாட்டு முறைகள் ஆகியவை எவ்வாறு ஒன்றோடொன்று தொடா்பு கொள்கின்றன என்பதை இந்த மாதிரி படம்பிடிக்க முயற்சிக்கிறது. இதன் விளைவாக உருவாகும் இரைச்சல் வரைபடங்களை, இந்திய இரைச்சல் தரநிலைகள் மற்றும் சா்வதேச வழிகாட்டுதல்களுடன் ஒப்பிட்டு, இரைச்சல் அளவுகளுக்கு அதிக கவனம் தேவைப்படும் பகுதிகளைக் கண்டறியலாம் என ஆராய்ச்சியாளா்கள் கூறுகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.