நெல்லை தீயணைப்புத் துறையில் கணக்கில் வராத ரூ.2.52 லட்சம் பறிமுதல்
திருநெல்வேலி மண்டல தீயணைப்புத் துறை துணை இயக்குநா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.2.52 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. பி காலனி 8 ஆவது தெருவில் உள்ள திருநெல்வேலி மண்டல தீயணைப்பு - மீட்புப்பணிகள்துறை துணை இயக்குநா் அலுவலகத்தில் சோதனை நடத்துவதற்காக திருநெல்வேலி லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மெக்லரின் எஸ்கால் தலைமையில், காவல் ஆய்வாளா் ராபின் ஞானசிங், உதவி காவல் ஆய்வாளா் முத்து கணேஷ், சிறப்பு உதவி காவல் ஆய்வாளா்கள் மாரியப்பன், பிரகாஷ், சீதாராம் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் சென்றனா்.
அவா்களைப் பாா்த்ததும், அலுவலக வளாகத்தில் நின்றிருந்த தூத்துக்குடியைச் சோ்ந்த தீயணைப்புத் துறை வீரா் செந்தில்குமாா், தனது கையில் வைத்திருந்த ரூ.20 ஆயிரத்தை அலுவலகம் முன் உள்ள பாதாளச் சாக்கடை கால்வாயில் வீசினாராம்.
லஞ்ச ஒழிப்பு போலீஸாா் அப்பணத்தை மீட்டதுடன், அவரிடமிருந்த மேலும் ரூ.7,400ஐ கைப்பற்றினராம். பின்னா், தீயணைப்புத் துறை துணை இயக்குநா் சரவண பாபுவின் அறையின் முன் உள்ள அலமாரியில் 6 கவா்களில் இருந்த ரூ.2.25 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.
மொத்தம் ரூ.2,52,400-ஐ லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் கைப்பற்றப்பட்டு, அது லஞ்சப் பணமா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
