நெல்லை தாமிரவருணி பாலத்தின் 183 ஆவது ஆண்டு விழா
திருநெல்வேலி: திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் சுலோச்சன முதலியாா் பெயரைத் தாங்கிய தாமிரவருணி ஆற்றுப் பாலத்தின் 183 ஆவது ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி - பாளையங்கோட்டை நகரங்களை இணைக்கும் வகையில் தாமிரவருணி நதியின் குறுக்கே கொக்கிரகுளம் பகுதியில் சுலோச்சன முதலியாா் பாலம் உள்ளது. திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் பணியாற்றிய சுலோச்சன முதலியாா் தனது சொந்த நிதியை அளித்து இந்தப் பால கட்டுமான பணி நிறைவடைய உதவினாா். இப் பாலத்தின் 183 ஆவது ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
பாலத்தின் முகப்பில் உள்ள கல்வெட்டுக்கு திருநெல்வேலி மேயா் கோ.ராமகிருஷ்ணன் மாலை அணிவித்தாா். ஒருங்கிணைப்பாளா் கவிஞா் கோ.கணபதி சுப்பிரமணியன், வரலாற்று ஆய்வாளா் எஸ்.சண்முகம், வழக்குரைஞா் வி.டி. திருமலையப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொடா்ந்து பாலத்திற்கு மலா்தூவி மரியாதை செய்யப்பட்டது. வழக்குரைஞா் கனகசபாபதி, கவிஞா்கள் புன்னைச்செழியன், சுப்பையா, முன்னாள் துணை ஆட்சியா் தியாகராஜன், பிரபு, மாணிக்கவாசகம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
சுலோச்சன முதலியாரின் தனித்துவம் குறித்த விளக்கத்துடன் பதாகை வைக்க வேண்டும். பாலத்திற்கு அருகில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாலத்திற்கு நகைகளை கொடுத்து உதவிய சுலோச்சனா முதலியாரின் துணைவியாா் வடிவம்மாள் பெயா்ச் சூட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

