மார்த்தாண்டம் மேம்பாலம்: வேகமெடுக்கும் இறுதிக்கட்டப் பணிகள்

மார்த்தாண்டம் மேம்பாலப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்ததையடுத்து, இப் பாலம் வரும் ஆகஸ்ட் மாத இறுதியில் திறக்கும் வகையில் பணிகள் அதிவேகமாக நடைபெற்று வருகின்றன.

மார்த்தாண்டம் மேம்பாலப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்ததையடுத்து, இப் பாலம் வரும் ஆகஸ்ட் மாத இறுதியில் திறக்கும் வகையில் பணிகள் அதிவேகமாக நடைபெற்று வருகின்றன.
மார்த்தாண்டத்தில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை குறைக்க இப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்தனர். இதையடுத்து, மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இதற்கான முயற்சியை மேற்கொண்டார். தொடர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் தேதி மார்த்தாண்டம் வந்த மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின்கட்கரி மேம்பாலம் பணிக்கு அடிக்கல் நாட்டினார். அதே ஆண்டு ஜூலை மாதம் 10 ஆம் தேதி மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் முன்னிலையில் மேம்பாலம் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றதை தொடர்ந்து மேம்பாலப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தேசிய நெடுஞ்சாலை எண்.47 இல் வெட்டுவெந்நியில் குழித்துறை ஆற்றுப் பாலம் முடியும் இடத்தில் தொடங்கி மார்த்தாண்டம் அருகே பம்மம் பகுதியில் உள்ள அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பணிமனை வரை 2.4 கி.மீட்டர் தொலைவுக்கு மார்த்தாண்டம் மேம்பாலம் அமைக்கப்படுகிறது. ரூ. 179 கோடியில் அமையவுள்ள இப்பாலம் தமிழகத்தின் முதல் இரும்புப் பாலமாகவும், தென்னிந்தியாவின் மிக நீளமான இரும்புப் பாலமாகவும் அமையவிருக்கிறது. இந்த மேம்பாலத்துக்காக 112 ராட்சத பில்லர்கள் (தூண்கள்) அமைக்கப்படுகின்றன. இதில் 21 தூண்கள் கான்கிரீட்டால் ஆனவை. மற்ற தூண்கள் அனைத்தும் இரும்பால் ஆனவை. 
மேலும், இரு தூண்களுக்கு இடையேயான இடைவெளி குறைந்தபட்சம் 19 மீட்டரில் இருந்து அதிகபட்சம் 47 மீட்டர் வரை உள்ளது. ரயில்வே சுரங்கப் பகுதியின் மேல் அமைக்கப்படும் தூண்களுக்கு இடையே 47 மீட்டர் இடைவெளி உள்ளது. இதில் 180 டன் எடையுள்ள 4 ராட்சத இரும்புப் பாளங்களை (குறுக்குத் தூண்கள்) ராட்சத கிரேன்கள் மூலம் பொருத்தும் பணி கடந்த 4 நாள்களாக நடைபெற்று வருகிறது. 
தேசிய நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்கள் முன்னிலையில் நடைபெற்று வரும் இப் பணிகளை கடந்த 23ஆம் தேதி தேசிய நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் தனசேகர் மற்றும் மும்பையைச் சேர்ந்த பொறியியல் வல்லுநர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்த மேம்பாலத்தின் மேல் 10 மீட்டர் அகலத்தில் சாலை அமைக்கப்படுகிறது. சாலை கான்கிரீட் தளம் 225 மி.மீட்டர் உயரத்தில் அமைக்கப்படுகிறது. இப்பணிகள் தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளது. மேலும், சாலையில் இருபுறங்களிலும் ஒரு மீட்டர் உயரத்துக்கு தடுப்புச் சுவர்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர பாலத்தின் அடிப்பகுதியான தரைத்தள பகுதியில் தரைவழி மின் இணைப்புக்கான மின்மாற்றிகள் பொருத்தும் பணி உள்ளிட்டவையும் நடைபெற்று வருகின்றன.
மேலும், முதற்கட்டமாக வெட்டுவெந்நியில் இருந்து மார்த்தாண்டம் பேருந்து நிலையத்துக்கு வாகனங்களை இயக்கும் வகையில் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும், இப்பணிகள் நிறைவடைந்து அடுத்த மாத இறுதியில் போக்குவரத்து தொடங்க வாய்ப்பு உள்ளதாகவும் மேம்பாலப் பணியில் ஈடுபட்டுள்ள பொறியாளர் ஒருவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com