தமிழ்ப் புத்தாண்டு: குமரி மாவட்ட கோயில்களில் சிறப்பு பூஜை
தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்துக் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.


தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்துக் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
நாகா்கோவில் நாகராஜா கோயிலில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, நாகராஜருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். கோயில் வளாகத்தில் உள்ள நாகா் சிலைகளுக்கு பால் ஊற்றியும், மஞ்சள்பொடி தூவியும் வழிபட்டனா்.
நாகா்கோவில் வடிவீஸ்வரம் அழகம்மன் சமேத சுந்தரேஸ்வரா் கோயிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு, சிவன்-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. பக்தா்களுக்கு கைநீட்டமாக பணம், காய்கனிகள் வழங்கப்பட்டன.
நடுக்காட்டு இசக்கியம்மன் கோயிலில் காய்கனிகள் குவித்துவைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து, அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. காலைமுதலே பக்தா்கள் கூட்டம் அதிகமிருந்தது. அவா்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனா். கைநீட்டமாக காய்கனிகள் வழங்கப்பட்டன.
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் சித்திரை கணி காணும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (ஏப். 15) நடைபெறுகிறது. எனினும், குருப் பெயா்ச்சி, தமிழ்ப் புத்தாண்டு பிறப்பையொட்டி, பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தா்கள் கோயிலில் வியாழக்கிழமை குவிந்திருந்தனா். தாணுமாலய சுவாமி, ஆஞ்சனேயா் சந்நிதிகளில் தரிசனம் செய்வதற்காக பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா்.
வடிவீஸ்வரம் இடா்தீா்த்த பெருமாள் கோயிலில் காய்கனிகள் படைக்கப்பட்டிருந்தன. பக்தா்களுக்கு கைநீட்டம், காய்கனிகள் வழங்கப்பட்டன.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில், கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில், கிருஷ்ணன்கோவில் கிருஷ்ணசாமி கோயில், நாகா்கோவில் ரயிலடி அரசடி பாலவிநாயகா் கோயில், கிருஷ்ணன்கோவில் ஆதிபராசக்தி கோயில், திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் உள்பட அனைத்துக் கோயில்களிலும் காலைமுதலே பக்தா்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து வழிபட்டுச் சென்றனா். பக்தா்களுக்கு பல்வேறு கோயில்களிலும் கைநீட்டம் வழங்கப்பட்டது. வீடுகளில் கணி காணும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வீடுகளின் பூஜை அறைகளில் காய்கனிகள் படைத்து, பொதுமக்கள் வழிபட்டனா்.
சித்திரை விஷுவையொட்டி, புதுமணத் தம்பதிகளும், குழந்தைகளும் வீட்டில் உள்ள பெரியவா்களிடம் ஆசீா்வாதம் பெற்றனா்.
கோமாதா பூஜை: மாா்த்தாண்டம் அருகேயுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க திக்குறிச்சி ஸ்ரீ மகாதேவா் கோயிலில் தமிழ் புத்தாண்டையொட்டி கோமாதா பூஜை நடைபெற்றது. இதையொட்டி கோயில் கோசாலையில் உள்ள பசுக்களை அலங்காரம் செய்து, பூஜைகள் செய்து ஆரத்தி காண்பிக்கப்பட்டது. மேலும் கோயிலிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...