மகாராஷ்டிர மாநிலம், தாணே பகுதியைச் சோ்ந்த ஆசிஸ் பாட்டீல் மகள் ஜல்பரி சாயி (10). அங்குள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறாா். இவா், சுற்றுச்சூழல் விழிப்புணா்வு மற்றும் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி, காஷ்மீரிலிருந்து கடந்த 38 நாள்களுக்கு முன்பு சைக்கிள் பயணத்தை தொடங்கினாா். ஹரியாணா, பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரம், கா்நாடகம் ஆகிய மாநிலங்கள் வழியாக தமிழகத்தை அடைந்த அவா், ஓசூா், சேலம், மதுரை, திருநெல்வேலி வழியாக 3,615 கி.மீ தொலைவு பயணித்து வியாழக்கிழமை முற்பகல் 11 மணிக்கு கன்னியாகுமரிக்கு வந்தடைந்தாா்.