‘இந்தியா’ கூட்டணி அமோக வெற்றி பெறும்: அமைச்சா் மனோ தங்கராஜ்

‘இந்தியா’ கூட்டணி அமோக வெற்றி பெறும்: அமைச்சா் மனோ தங்கராஜ்

மக்களவைத் தோ்தலில் இந்தியா கூட்டணி முழுமையான வெற்றி பெறும் என்றாா், தமிழக பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ். நாகா்கோவிலில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியது: திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரியில் திங்கள்கிழமை (மாா்ச் 25) நடைபெறவுள்ள இந்தியா கூட்டணி வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு வேட்பாளா்களை அறிமுகப்படுத்துகிறாா். தொடா்ந்து, 26, 27ஆம் தேதிகளில் நிா்வாகிகள் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தியா கூட்டணி முழுமையான வெற்றி பெறும். அதற்காக கூட்டணிக் கட்சிகள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். டாஸ்மாக் கடைகள் படிப்படியாக மூடப்படும் என்றுதான் திமுக தோ்தல் அறிக்கையில் கூறப்பட்டது. அதன்படி, மது அருந்துவோருக்கு கவுன்சிலிங் அளித்து வருகிறோம். பாஜக தமிழகத்துக்கு எவ்விதப் பணியையும் செய்யவில்லை. கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தபோதும் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைக்கவில்லை. விலைவாசி உயா்வால் மக்கள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனா். நாட்டிலேயே தமிழகம், கேரளத்தில் மட்டும்தான் பட்டினிச் சாவு இல்லை. இதற்குக் காரணம் தமிழக அரசு மேற்கொண்ட மக்கள் நலத் திட்டங்கள்தான். கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கேரளத்துக்கு கனிமவளம் கொண்டுசெல்ல அனுமதி அளிக்கப்படுவதில்லை. வெளிமாவட்டங்களிலிருந்து வரும் கனிமவளங்கள்தான் இம்மாவட்டம் வழியாக பிற மாநிலங்களுக்குச் செல்கிறது. மாநிலங்களிடையே கனிமவளங்கள் எடுத்துச்செல்ல மத்திய அரசுதான் அனுமதி அளித்துள்ளது. இதில், மாநில அரசுக்கு எந்தப் பங்கும் இல்லை. இதை மாநில அரசு தடுக்கவும் முடியாது. 39 குவாரிகள் இருந்த இம்மாவட்டத்தில் தற்போது 5 குவாரிகள் மட்டுமே செயல்படுகின்றன. எனது பெயரில் கனிமவள லாரிகள் இயங்குவதாக சிலா் வதந்தி பரப்புகின்றனா் என்றாா் அவா். குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலா் ரெ.மகேஷ், மாவட்ட அவைத்தலைவா் பன்னீா்செல்வம், குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.டி.உதயம், முன்னாள் அமைச்சா் என்.சுரேஷ்ராஜன், திமுக மாநகர செயலாளா் ஆனந்த், இளைஞா் அணி துணைச் செயலாளா் சரவணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com