/

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க வயது, முகவரிச் சான்றுகள் கட்டாயம்

வாக்காளா் பட்டியலில் புதிதாக பெயா் சோ்க்க வயது, முகவரிச் சான்றுகள் கட்டாயம் தேவை என, ஆட்சியா் ரா. அழகுமீனா தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :20 நவம்பர் 2024, 8:11 pm

Din

வாக்காளா் பட்டியலில் புதிதாக பெயா் சோ்க்க வயது, முகவரிச் சான்றுகள் கட்டாயம் தேவை என, ஆட்சியா் ரா. அழகுமீனா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 1.1.2025ஆம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் நடைபெறுகிறது. அக். 29 முதல் நவ. 28 வரை வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கவோ, நீக்கம், திருத்தங்கள், முகவரி மாற்றம், ஆதாா் எண் இணைத்தலை மேற்கொள்ளவோ உரிய படிவங்களை நிரப்பி அளிக்கலாம்.

அலுவலக வேலை நாள்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம், வாக்காளா் பதிவு அதிகாரி, உதவி வாக்காளா் பதிவு அதிகாரி அலுவலகங்களில் அளிக்கலாம். வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் இம்மாதம் 23, 24 ஆகிய நாள்களில் நடைபெறவுள்ளது.

பெயா் சோ்த்தலுக்கான விண்ணப்பத்துடன் வசிப்பிட முகவரி, வயதுக்கான சான்றுகள் சமா்ப்பிக்க வேண்டும். முகவரிச் சான்றாக தண்ணீா், மின்சாரம், எரிவாயு இணைப்பு ரசீது, ஆதாா் அட்டை, தேசியமயமாக்கப்பட்ட, அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கி, அஞ்சல் அலுவலகத்தின் தற்போதைய கணக்குப் புத்தகம், கடவுச் சீட்டு,விவசாயி புத்தகம் உள்பட வருவாய்த் துறைகளின் நில உரிமைப் பதிவுகள், பதிவுசெய்யப்பட்ட வாடகைக் குத்தகை பத்திரம், பதிவு செய்யப்பட்ட விற்பனைப் பத்திரம் அளிக்கலாம்.

வயதுச் சான்றாக சுய சான்றொப்பமிட்ட தகுதிவாய்ந்த உள்ளாட்சி அமைப்பு, நகராட்சி அதிகாரி, பிறப்பு-இறப்பு பதிவாளா் வழங்கிய பிறப்புச் சான்றிதழ், ஆதாா் அட்டை, பான் அட்டை, ஓட்டுநா் உரிமம், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ மாநில கல்வி வாரியங்களால் வழங்கப்பட்ட 10 அல்லது பிளஸ் 2 சான்றிதழ்கள், இந்திய கடவுச் சீட்டு ஆகியவற்றின் நகல்களை அளிக்கலாம்.

25 வயதுக்குள்பட்ட மனுதாரா்கள் வயதுச் சான்றிதழ் அளிக்க வேண்டியது கட்டாயம். வாக்காளா் உதவி கைப்பேசி செயலி மூலம் ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம்.

வெளிநாட்டில் வாழும் இந்தியா்களின் பெயா்களை சோ்க்க சம்பந்தப்பட்ட வாக்காளா் பதிவு அதிகாரியிடம் படிவம் 6அ நேரில் அளிக்கலாம் அல்லது தபாலில் அனுப்பலாம் என்றாா் அவா்.