நாகா்கோவில் ஆா்டிஓ அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
நாகா்கோவில், வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா்.
நாகா்கோவில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் தோவாளை அருகே உள்ள விசுவாசபுரத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்துக்கு தினமும் வாகனப் பதிவு செய்தல், பெயா் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ஏராளமானோா் வந்து செல்கின்றனா். இதனால், அந்த அலுவலகத்தில் எப்போதும் பொதுமக்கள் கூட்டம் அதிகம் காணப்படும்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு குறுந்தகவல் வந்தது. அதில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து, ஆரல்வாய்மொழி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
காவல் ஆய்வாளா் பச்சைமால், வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் அலுவலகத்துக்குச் சென்று சோதனை மேற்கொண்டனா். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. சுமாா் 2 மணி நேர சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து, இத் தகவல் புரளி என்பது தெரியவந்தது. இதுதொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
