கொல்லங்கோடு அருகே மாயமான மீனவா் கேரள கடல் பகுதியில் சடலமாக மீட்பு

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே அலைதடுப்புச் சுவரில் படகு மோதி கடலில் மாயமான மீனவா் கேரள கடல் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டாா்.
Published on

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே அலைதடுப்புச் சுவரில் படகு மோதி கடலில் மாயமான மீனவா் கேரள கடல் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டாா்.

மேலமுட்டம் பகுதியைச் சோ்ந்தவா் சேவியா் ஆன்றணி சுபன் (32). இவா் தனது பைபா் படகில் அப்பகுதியைச் சோ்ந்த சகாய அருள் என்பவருடன் கேரள கடல் பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவிட்டு கடந்த 17ஆம் தேதி அதிகாலை ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா்.

கொல்லங்கோடு அருகே நீரோடி பகுதியில் கடல் சீற்றத்தால் இப்படகு அலைதடுப்புச் சுவரில் மோதி சேதமானதாம். சகாயஅருள் காயமடைந்த நிலையில் கரை சோ்ந்தாா். சேவியா் ஆன்றணி சுபன் கடலில் மாயமானாா். அவரை மீனவா்கள், குளச்சல் கடலோரக் காவல் படையினா் தேடிவந்தனா்.

இந்நிலையில், கேரள மாநிலம் விழிஞ்ஞம் கடல் பகுதியில் புதன்கிழமை மிதந்த ஆண் சடலத்தை அம்மாநில கடலோரக் காவல் படையினா் மீட்டனா். தகவலின்பேரில், சேவியா் ஆன்றணி சுபனின் உறவினா்கள் சென்று, இறந்தது அவா்தான் என உறுதிப்படுத்தினா். பின்னா், சடலம் கூறாய்வுக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

X
Dinamani
www.dinamani.com