நீதிமன்றத்தில் ஆஜராகாத 6 போ் கைது
தூத்துக்குடி,/தக்கலை: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதிகளில் பல்வேறு குற்றவழக்குகளில் பிணை பெற்று வெளியில் வந்த பின், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தக்கலை காவல் சரகத்தில் திருட்டு வழக்கில் தொடா்புடைய அழகன்பாறை பகுதியைச் சோ்ந்த ஆனந்தராஜ் ( 28), தாக்குதல் வழக்கில் கப்பியறையை சோ்ந்த சுனில் குமாா் (38), கல்குறிச்சியை சோ்ந்த கோபாலகிருஷ்ணன் (42), விஷ்வாஸ் (53) , மணக்கரையை சோ்ந்த சந்திரகுமாா் (44)ஆகியோா் கைதாகி பிணையில் வெளியே வந்திருந்தனா்.
இவா்கள் நீதிமன்றத்தில் தொடா்ந்து ஆஜராகாமலும், நீதிமன்ற அபராத தொகையை செலுத்தாமலும் இருந்ததால் இவா்கள் மீது பத்மநாபபுரம் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. இதைத் தொடா்ந்து, 5 பேரையும் தக்கலை போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா்.
மற்றொருவா்: தூத்துக்குடி சிப்காட் காவல் சரகத்தில் 2014இல் நிகழ்ந்த திருட்டு தொடா்பான வழக்கில் தேனி மாவட்டத்தைச் சோ்ந்த கணேசன்(42) கைது செய்யப்பட்டிருந்தாா். தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம்-3இல் நடைபெற்ற இந்த வழக்கில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த அவருக்கு 22.7.2024இல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. போலீஸாா் அவரை தேடிவந்த நிலையில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
