நெல்லை மாவட்டத்தில் 5 ஆண்டுகளில் 26 ஆயிரம் பெண்களுக்கு ரூ. 85 கோடி திருமண உதவி; 102 கிலோ தங்கம்: ஆட்சியர் தகவல்

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் இதுவரை 26 ஆயிரம் பெண்களுக்கு ரூ. 85 கோடி மதிப்பிலான திருமண உதவித்தொகையும், தாலிக்கு 102 கிலோ தங்கமும் வழங்கப்பட்டுள்ளதாக, ஆட்சியர் மு.கருணகாரன் தெரிவித்தார்.

Published On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் இதுவரை 26 ஆயிரம் பெண்களுக்கு ரூ. 85 கோடி மதிப்பிலான திருமண உதவித்தொகையும், தாலிக்கு 102 கிலோ தங்கமும் வழங்கப்பட்டுள்ளதாக, ஆட்சியர் மு.கருணகாரன் தெரிவித்தார்.

தமிழக முதல்வரின் சிறப்புத் திட்டங்களின் ஒன்றான ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு தாலிக்கு தங்கம், திருமண உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் உதவிகள் வழங்கும் விழா, திருநெல்வேலியை அடுத்த உடையார்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு தலைமை வகித்து ஆட்சியர் பேசியது:

பெண் கல்வியை ஊக்குவிக்கவும், வறுமையால் ஏழைப் பெண்களுக்கு திருமணம் தடைபடக் கூடாது என்பதற்காகவும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா அறிமுகப்படுத்தினார். பட்டம், பட்டயப் படிப்பு முடித்த பெண்களுக்கு 4 கிராம் தங்கம், ரூ. 50 ஆயிரம் ரொக்கம், 10, 12ஆம் வகுப்பு படித்தோருக்கு 4 கிராம் தங்கம், ரூ. 25 ஆயிரம் ரொக்கம் வழங்கப்படுகிறது. இதன்படி, 2011ஆம் ஆண்டு முதல் 2016 வரையில் மாவட்டத்தில் பட்டம், பட்டயப் படிப்பு முடித்த 7,879 பெண்கள், 10, 12ஆம் வகுப்பு படித்த 17,397 பெண்கள் என மொத்தம் 25,276 பேருக்கு ரூ. 83.08 கோடியில் நிதியுதவியும், 101.10 கிலோ தங்கமும் வழங்கப்பட்டுள்ளது.

இவைதவிர, இந்த விழாவில், 794 பேருக்கு ரூ. 2.30 கோடி மதிப்பில் திருமண உதவியும், தங்கமும் வழங்கப்படுகிறது. மேலும், கிராமப்புறப் பெண்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக இதுவரை 2,700 பேருக்கு கறவை மாடுகள் வழங்கப்பட்டுள்ளன.

28,031 குடும்பங்களுக்கு தலா 4 ஆடுகள் வழங்கப்பட்டுள்ளன. சூரிய மின் ஒளிசக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் 12,158 பேருக்கு வழங்கப்பட்டுள்ளன. 7.75 லட்சம் பேருக்கு விலையில்லா மின்சாதனப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம், நகர்ப்புறங்களுக்கு இணையாக கிராமப்புறங்களும் வளர்ச்சி பெற்றுள்ளன. தொடர்ந்து, மக்கள் நலத் திட்டங்களைப் பயன்படுத்தி வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்றார் அவர்.

விழாவில, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் ஆர். முருகையாபாண்டியன், சங்கரன்கோவில் எம்எல்ஏ முத்துசெல்வி ஆகியோர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். அரசு அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள், மகளிர் குழு உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.