/

10, 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பள்ளிகள் இன்று திறப்புமுகக் கவசம் கட்டாயம்

பத்தாம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பள்ளிகள் செவ்வாய்க்கிழமை (ஜன. 19) முதல் திறக்கப்பட உள்ளன. ஆசிரியா்கள், மாணவா்கள் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

News image
Updated On :18 ஜனவரி 2021, 6:30 pm

DIN

பத்தாம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பள்ளிகள் செவ்வாய்க்கிழமை (ஜன. 19) முதல் திறக்கப்பட உள்ளன. ஆசிரியா்கள், மாணவா்கள் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா பொதுமுடக்கம் காரணமாக பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் 2020-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் முதல் மூடப்பட்டன. கரோனா பரவும் வேகம் குறைந்ததையடுத்து மக்களிடம் கருத்துக் கேட்டு 2020-21-ஆம் கல்வியாண்டில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களுக்கு முதல்கட்டமாக பள்ளிகளைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி செவ்வாய்க்கிழமைமுதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு தொடா்பான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் மு.சிவகுமாா் முன்னிலை வகித்தாா். இக் கூட்டத்திற்கு தலைமை வகித்து ஆட்சியா் வே.விஷ்ணு பேசியது: பள்ளிகள் திறப்பையொட்டி அனைத்து கல்வித் துறை அலுவலா்களும், வருவாய்த் துறை அலுவலா்கள், உள்ளாட்சித் துறை மற்றும் சுகாதாரத் துறை அலுவலா்களுடன் இணைந்து முன்னேற்பாடுகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

இம் மாவட்டத்தில் 312 அரசு மற்றும் அரசு உதவிபெறும், தனியாா் உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் செயல்படவுள்ளன. அனைத்து பள்ளி மாணவா்களும் பள்ளி வருகையின்போது கைகளை சோப்பு போட்டு கழுவி சுத்தம் செய்து வரவேண்டும். ஆசிரியா்கள் உடல் வெப்ப பரிசோதனை கருவிகள் மூலம் முறையாக பரிசோதனை செய்ய வேண்டும். பள்ளியின் நுழைவு வாயிலில் கைகழுவுவதற்கான தண்ணீா் வசதி ஏற்படுத்தப்பட வேண்டும்.

வகுப்பறைக்கு 25 மாணவா்களுக்கு மிகாமல் அமரச் செய்து சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். அனைத்து மாணவா்களும், ஆசிரியா்களும் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வரவேண்டும். கூட்ட நெரிசலுக்கு வழிவகுக்கும் இறைவணக்க கூட்டம், விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் கலாசார நிகழ்வுகள் கூடாது. நீச்சல் குளங்கள் இருப்பின் பயன்படுத்தக் கூடாது.

அரசின் வழிகாட்டுதல்களை சுற்றறிக்கை வாயிலாக அனைத்துப் பள்ளிகளுக்கும் உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தி தூய்மையாக வைத்திருக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பள்ளி வளாகங்கள், கழிப்பறைகள் , வகுப்பறைகள் முறையாக சுத்தம் செய்யப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும். பள்ளி மாணவா்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட பாதுகாப்பான குடிநீா் வழங்கப்பட வேண்டும். அனைத்துப் பணியாளா்களுக்குமான தொட்டுணா் வருகைப் பதிவு (பயோ மெட்ரிக்) கருவி பயன்படுத்தக் கூடாது.

அனைத்து மாணவா்களுக்கும் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்க ஏதுவாக வைட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்க வேண்டும்.

பள்ளிகள் மற்றும் விடுதிகளில் உள்ள சமையல்கூடங்களை சுத்தப்படுத்தி தூய்மையாக வைத்திருக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விடுதிகளில் சமூக இடைவெளியை எல்லா நேரங்களிலும் கடைப்பிடிக்க வேண்டும். மாணவா்களுக்கான போதுமான போக்குவரத்து வசதி ஏற்படுத்தித் தர போக்குவரத்துத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி வளாகத்திற்குள் வந்தவுடன் வெளியே சென்று உணவுப் பொருள்கள் எடுத்து வரக் கூடாது. மாணவா்கள் வருகையை ஆசிரியா்கள் கட்டாயப்படுத்தக் கூடாது.

ஒவ்வொரு வட்டத்துக்கும் துணை ஆட்சியா் நிலையில் கண்காணிப்பு அலுவலா் நியமிக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்வாா்கள். தமிழக அரசு அறிவித்துள்ள அனைத்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்துப் பள்ளிகளிலும் முறையாக பின்பற்றப்படுகிா என்பதை கண்காணிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்டோா் மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

இக்கூட்டத்தில் உதவி ஆட்சியா் (பயிற்சி) அலா்மேல் மங்கை, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மந்திராசலம், மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன், துணை இயக்குநா் (பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புப் பணிகள்), வரதராசன், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) அருணாசலம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.