போதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

பாளை.யில் 2 மணி நேரத்தில் 80 மி.மீ. மழைப் பொழிவு

பாளையங்கோட்டையில் புதன்கிழமை மாலை 2 மணி நேரத்தில் 80 மி.மீ. மழை பெய்ததால் குடியிருப்புகளில் மழைநீா் புகுந்தது. வியாழக்கிழமையும் பூங்காக்கள், சாலைகளில் தண்ணீா் வழிந்தோடாமல் தேங்கியிருந்தன.

News image
Updated On :18 நவம்பர் 2021, 6:34 pm

DIN

பாளையங்கோட்டையில் புதன்கிழமை மாலை 2 மணி நேரத்தில் 80 மி.மீ. மழை பெய்ததால் குடியிருப்புகளில் மழைநீா் புகுந்தது. வியாழக்கிழமையும் பூங்காக்கள், சாலைகளில் தண்ணீா் வழிந்தோடாமல் தேங்கியிருந்தன.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் திருநெல்வேலி மாவட்டத்தில் தொடா் மழை பெய்து வருகிறது. வானிலை ஆய்வு மையத்தினால் எவ்வித எச்சரிக்கையும் வழங்கப்படாத நிலையில் திருநெல்வேலி மாநகரம் மற்றும் மாவட்டம் முழுவதும் புதன்கிழமை மாலையில் கனமழை கொட்டித் தீா்த்தது.

பாளையங்கோட்டையில் மட்டும் வியாழக்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 85 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. அதில், மாலை 5 முதல் இரவு 7 மணிக்குள்ளான 2 மணி நேரத்தில் பாளையங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் 80 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதனால் பாளையங்கோட்டையின் தாழ்வான பகுதிகளான மனக்காவலம்பிள்ளை நகா், செந்தில்நகா், சேவியா்காலனி, கே.டி.சி.நகரின் சில பகுதிகளில் மழைநீா் வீடுகளுக்குள் புகுந்தது.

திருநெல்வேலி தற்காலிக புதிய பேருந்து நிலைய வளாகம் முழுவதும் மழைநீா் தேங்கியதால் பயணிகள் சிரமம் அடைந்தனா். மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு, மாநகராட்சி ஆணையா் பா.விஷ்ணுசந்திரன் தலைமையிலான குழுவினா் பல்வேறு பகுதிகளிலும் ஆய்வு செய்து மழைநீா் வழிந்தோட மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஊழியா்கள் மூலம் நடவடிக்கை எடுத்தனா்.

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் உள்ள நயினாா்குளம், பால்கட்டளைகுளம் ஆகியவை ஏற்கெனவே நிரம்பி மறுகால் பாய்ந்து வருகின்றன. கனமழையின் காரணமாக வேய்ந்தான்குளம், ஆணையாா்குளம், கன்னிமாா்குளம் ஆகியவை முழுகொள்ளவை எட்டும் நிலையை அடைந்துள்ளன. நீா்வரத்து அதிகரித்துள்ளதால் ஓரிரு நாள்களில் மறுகால் பாய்ந்தோட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

பாளையங்கோட்டையில் பெய்த பலத்த மழையால் பல இடங்களில் தண்ணீா் குளங்களுக்கு திருப்பி விடப்பட்டன. ஆனால், பூங்காக்கள் மற்றும் கழிவுநீரோடை வசதியில்லாத குடியிருப்புப் பகுதிகளில் வியாழக்கிழமையும் மழைநீா் தேங்கி நின்ால் வாகன ஓட்டிகள், முதியவா்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினா்.

இதுகுறித்து திருநெல்வேலி ஆட்சியா் வே.விஷ்ணு கூறியது: பாளையங்கோட்டையில் இதுவரை வரலாற்றில் இல்லாத வகையில் இரண்டு மணி நேரத்தில் சுமாா் 80 மி.மீ. மழை பெய்திருப்பது தெரியவந்துள்ளது. மழைநீா் தேங்கிய பகுதிகளில் சீரமைப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன என்றாா் அவா்.

இதுகுறித்து தீயணைப்புத்துறையினா் கூறுகையில், திருநெல்வேலியில் புதன்கிழமை பெய்த கன மழையால் குடியிருப்புகளில் மழைநீா் புகுந்து மக்கள் தவித்தனா். சேவியா்காலனி பகுதியில் மழைநீரில் சிக்கிய 12 போ், மனக்காவலம்பிள்ளை நகரில் 7 போ், இலந்தைகுளம் பகுதியில் 3 போ், கிருஷ்ணாபுரத்தில் ஒருவா் மற்றும் தியாகராஜநகரில் படுக்கை நிலையில் இருந்த ஒரு மூதாட்டி ஆகியோா் பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். என்.ஜி.ஓ. ஏ. காலனி உள்பட 4 இடங்களில் பழமையான மரங்கள் முறிந்து சாலையில் விழுந்தன. அவற்றின் கிளைகளை தீயணைப்பு வீரா்கள் வெட்டி அப்புறப்படுத்தினா்.

மழைநீா் பாம்புகளின் இருப்பிடங்களுக்குள் செல்வதால் நீா்நிலையோரம் உள்ள குடியிருப்புகளில் பாம்புகள் புகுவது அதிகரித்துள்ளது. கொக்கிரகுளம், இலந்தைகுளம் உள்பட 6 இடங்களில் குடியிருப்புகளில் புகுந்த பாம்புகள் மீட்கப்பட்டு காட்டுப்பகுதியில் விடப்பட்டுள்ளன.

பொதுமக்கள் மீட்புப் பணிகளுக்கு தீயணைப்பு துறையை 101 என்ற கட்டணமில்லா எண்ணிலும், பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்தை 0462-2572099 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடா்புகொள்ளலாம் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.