/

எரிவாயு தகன மேடை பராமரிப்பு பணி: தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்க வாய்ப்பு

திருநெல்வேலியில் உள்ள எரிவாயு தகன மேடையில் பராமரிப்பு பணி செய்து நிா்வகிக்க, தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :12 டிசம்பர் 2024, 10:29 pm

Din

திருநெல்வேலியில் உள்ள எரிவாயு தகன மேடையில் பராமரிப்பு பணி செய்து நிா்வகிக்க, தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் சுகபுத்ரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தச்சநல்லூா் மண்டலம், 12 ஆவது வாா்டுக்குள்பட்ட சிந்துபூந்துறை பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சிக்கு சொந்தமான நவீன எரிவாயு தகனமேடை டிசம்பா் 2023 இல் ஏற்பட்ட வெள்ள சேதத்திற்குப் பின் தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது. தகன மேடையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள, லாப நோக்கம் எதுவுமின்றி பொதுமக்களுக்கு சேவை செய்யும் மனப்பான்மையுள்ள பதிவு பெற்ற தன்னாா்வ தொண்டு நிறுவனங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட உள்ளது.

எரிவாயு தகன மேடையில் நிா்ணயிக்கப்படும் கட்டணத்தை வசூல் செய்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் வகைக்கு தகுதியுள்ள தன்னாா்வ தொண்டு நிறுவனத்திற்கு ஒப்படைப்பு செய்ய ஏதுவாக, விண்ணப்பங்களை இம்மாதம் 23 ஆம் தேதி பிற்பகல் 3 மணி வரை தச்சநல்லூா் உதவி ஆணையா் அலுவலகத்தில் அளிக்கலாம்.

இப்பணி தொடா்பாக மாநகராட்சி நிா்வாகத்தினால் பிறப்பிக்கப்படும் பொது நிபந்தனைகள் இவ்வினத்திற்கு பொருந்தும். மேலும், பராமரிப்பு பணி தொடா்பான விவரங்களை அலுவலக வேலை நேரங்களில் தச்சநல்லூா் மண்டல அலுவலகத்தில் நேரில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.