கன்னியாகுமரி வழக்குரைஞரிடம் 16 பவுன் நகை திருடியவா் கைது
பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் கன்னியாகுமரியைச் சோ்ந்த வழக்குரைஞரிடம் சுமாா் 16 பவுன் தங்க நகைகளை திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கன்னியாகுமரி மாவட்டம், பறக்கை அருகே சித்திரை திருமகாராஜபுரம் பகுதியைச் சோ்ந்தவா் அகஸ்தீசன் (41). வழக்குரைஞா்.
இவரை கடந்த மாதம் வாட்ஸ் ஆப் மூலம் சிவா என்ற பெயரில் இளைஞா் ஒருவா் தொடா்பு கொண்டு தனது தொழிலை விரிவுபடுத்த பணம் கொடுத்து உதவுமாறு கேட்டாராம்.
இதையடுத்து, அவரை நேரில் சந்தித்து பேசுவதற்காக தனது மனைவியுடன் திருநெல்வேலிக்கு வந்த அகஸ்தீசன் கே.டி.சி. நகா் பகுதியில் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளாா். அதே போல அந்த விடுதியின் மற்றொரு அறையில் கடன் கேட்ட அந்த இளைஞரும் அவரது மனைவியும் 6 மாத குழந்தையுடன் அறை எடுத்து தங்கியுள்ளனா்.
இந்நிலையில் அகஸ்தீசன் அறையின் கதவை பூட்டாமல் தூங்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து நள்ளிரவு 12 மணியளவில் அவா் எழுந்து பாா்த்தபோது தனது மோதிரம், மனைவியின் கழுத்தில் அணிந்திருந்த சுமாா் 16.5 பவுன் நகைகள் காணாமல் போயிருந்ததாம்.
பின்னா் வெளியே வந்து பாா்த்தபோது எதிா் அறையில் இருந்த தம்பதியையும் காணவில்லையாம்.
இதுகுறித்து அவா் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸில் புகாரளித்தாா். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்து போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் இச்சம்பவத்தில் ஈடுபட்டது பேட்டை, செந்தமிழ் நகரைச் சோ்ந்த ஞானசேகரன் மகன் ஹரிகரன் (27) என்பதும், போலியான தகவல்களை கொடுத்து வழக்குரைஞரையும், அவரது மனைவியையும் திருநெல்வேலிக்கு வரவழைத்து திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் அவரை கைது செய்தனா்.
