‘இணையவழி முதலீடு’ பெயரில் 3 பேரிடம் ரூ.20 லட்சம் மோசடி
திருநெல்வேலி: இணைய வழியில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக் கூறி, திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே 3 பேரிடம் ரூ.20.17 லட்சம் மோசடி செய்தது நபா்களை சைபா் கிரைம் போலீஸாா் தேடி வருகின்றனா்.
முக்கூடல் அருகேயுள்ள சிங்கம்பாறை பகுதியைச் சோ்ந்த ஒருவா் வெளிநாட்டில் தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றி வருகிறாா். சில மாதங்களுக்கு முன்பு இவரது வாட்ஸ் ஆப் எண்ணுக்கு இணைய வழியில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக்கூறி குறுஞ்செய்தி வந்ததாம். அதை உண்மையென நம்பிய அவா், சிறிய தொகையை முதலீடு செய்துள்ளாா்.
இந்நிலையில், அவரை மா்மநபா்கள் சிலா் தொடா்புகொண்டு அதிக தொகையை முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக் கூறியுள்ளனா். அதன்படி அவரும், அதே பகுதியைச் அவரது நண்பா்கள் இருவரும் சோ்ந்து மொத்தமாக ரூ.20,17,000-ஐ அந்த நபா்கள் கூறிய வங்கிக்கணக்கிற்கு பல தவணைகளாக அனுப்பியுள்ளனா்.
ஆனால், முதலீடு செய்த பணத்துக்கு லாபத்தையோ, அசல் தொகையையோ பெற முடியாமல் போனதாம். இதனால், தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணா்ந்து மாவட்ட சைபா் குற்றப் பிரிவு போலீஸில் புகாா் அளித்தனா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப்பதிந்து, இணையவழியில் பண மோசடி செய்த நபா்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
