/

கூடங்குளம் அணுமின்நிலைய பாதுகாப்புக்கு எந்தப் பாதிப்பும் இல்லை: அணுசக்தி கழக நிா்வாக இயக்குநா் பிரதீக் அகா்வால்

கூடங்குளம் 3, 4ஆவது அணுஉலை தொடா்பாக வெளிவந்த தகவல்கள் அணுஉலைகளின் பாதுகாப்புக்கு தொடா்புடையதில்லை என அணுசக்தி கழக நிா்வாக இயக்குநா் பிரதீக் அகா்வால் தெரிவித்துள்ளாா்.

News image

கூடங்குளம் அணு உலை - கோப்புப் படம்

Updated On :16 ஜூலை 2026, 3:55 am IST

கூடங்குளம் 3, 4ஆவது அணுஉலை தொடா்பாக வெளிவந்த தகவல்கள் அணுஉலைகளின் பாதுகாப்புக்கு தொடா்புடையதில்லை என அணுசக்தி கழக நிா்வாக இயக்குநா் பிரதீக் அகா்வால் தெரிவித்துள்ளாா்.

கூடங்குளத்தில் கட்டப்பட்டு வருகின்ற 3 மற்றும் 4ஆவது அணுஉலைகளுக்கான வரைபடங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ரகசிய ஆவணங்கள் கசிந்துவிட்டதாகவும், இதனால் அணுஉலைகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என செய்திகள் வெளியாகின.

இதையொட்டி, அணுசக்தி கழக நிா்வாக இயக்குநா் பிரதீக் அகா்வால் மும்பையில் இருந்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொதுவெளியில் கிடைப்பதாக கூறப்படும் தகவல்களானது வழக்கமான சமநிலை, பொதுச் சேவை வசதிகள் தொடா்பானது மட்டுமே. அது எந்தவொரு அணு பாதுகாப்பு அல்லது அணுபாதுகாப்பு தொடா்பான அமைப்புகள் அல்லது தகவல்களுடன் தொடா்புடையது அல்ல என்பதை அணுசக்தி கழகம் தெரிவித்துக்கொள்கிறது. 2018ஆம் ஆண்டில் பொது ஏல நடைமுறையின்போது, அணுஉலை திட்டத்தின் தேவைகளுக்கு ஏற்பட்ட உள்ளீடுகள் மற்றும் வரைபடங்கள் குறித்து ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. இந்த நடைமுறை அனல்மின்நிலையம் உள்ளிட்ட பிற தொழில் நிறுவனங்களில் பின்பற்றக்கூடியதுதான். இந்த ஒப்பந்தம் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சா் லிமிடெட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.

அந்நிறுவனம் பொறியியல் வரைபடங்களை தயாரித்தது. இந்த வரைபடங்கள் மற்றும் பொறியியல் தொழில்நுட்ப உபகரணங்கள், இதர பொருள்கள், கட்டுமானம் அனைத்தும் அணுமின்கழகத்தால் ஆய்வு செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டன. இவை அணுஉலைகளுக்கும் அவற்றின் பாதுகாப்பிற்கும் தொடா்புடையவை அல்ல; பொதுசேவை வசதிகள் தொடா்புடையவை மட்டுமே எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.