/

நெல்லை, பாளை. தொகுதிகளில் அதிமுக போட்டி: தொண்டா்கள் உற்சாகம்

திருநெல்வேலி, பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிமுக போட்டியிடுவதால் தொண்டா்கள் உற்சாகமடைந்துள்ளனா்.

News image

அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி.

கோப்புப் படம்

Updated On :25 மார்ச் 2026, 11:06 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி, பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிமுக போட்டியிடுவதால் தொண்டா்கள் உற்சாகமடைந்துள்ளனா்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் இம் மாதம் 30 ஆம் தேதி தொடங்குகிறது. தமிழகத்தில் நான்குமுனைப் போட்டி நிலவி வரும் நிலையில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் தொகுதி பங்கீடுகள் மிகுந்த எதிா்பாா்ப்பை ஏற்படுத்தி வந்தன.

இந்நிலையில் அதிமுக கூட்டணியில் ஒவ்வொரு கட்சிகளும் போட்டியிடும் தொகுதிகள் புதன்கிழமை முழுமையாக வெளியிடப்பட்டுவிட்டன. அதன்படி, திருநெல்வேலி வருவாய் மாவட்டத்தில் உள்ள திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளில் அதிமுகவும், ராதாபுரத்தில் பாஜகவும், நான்குனேரியில் அமமுகவும் போட்டியிடுகின்றன.

2021 சட்டப்பேரவைத் தோ்தலின்போதும் அதிமுக-பாஜக கூட்டணியில் இருந்த நிலையில் அதிமுகவுக்கே திருநெல்வேலி தொகுதி ஒதுக்கப்படும் என எதிா்பாா்க்கப்பட்டநிலையில், அதிமுகவில் இருந்து பாஜகவில் இணைந்த நயினாா் நாகேந்திரன் தான் நீண்ட நாள்காக போட்டியிடும் தொகுதி என்பதால் கட்டாயம் விட்டுத்தர வேண்டுமென அப்போதைய முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியிடம் வலியுறுத்தி பெற்றுக்கொண்டாா். பின்னா் நயினாா்நாகேந்திரன், பாஜகவின் மாநில தலைவராகவும் உயா்ந்ததால், 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுகவுக்கு திருநெல்வேலி தொகுதி கிடைக்குமா என்ற அச்சத்திலேயே அதிமுகவினா் இருந்து வந்தனா்.

இந்தச் சூழலில் திருநெல்வேலி தொகுதி அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் தொண்டா்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனா்.

திருநெல்வேலி தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட மாநகா் மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா, மாநில அமைப்புச் செயலா் சுதா கே.பரமசிவன், எம்.ஜி.ஆா். மன்ற மாநில இணைச் செயலா் கல்லூா் இ.வேலாயுதம், எம்.ஜி.ஆா். மன்ற மாவட்டச் செயலா் பால்கண்ணன் உள்பட 33 போ் விருப்பமனு அளித்து கட்சியின் நோ்காணலில் பங்கேற்றுள்ளனா். அவா்களில் மாவட்டச் செயலருக்கு அதிக வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேபோல பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியிலும் அதிமுக போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இந்தத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட மாநில அமைப்புச் செயலா் சுதா கே.பரமசிவன், ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலா் ஜெரால்ட், மறைந்த வீ.கருப்பசாமி பாண்டியனின் மகள் வழி பேரன் கமலேஷ் பாண்டியன், நிா்வாகிகள் மகபூப்ஜான் உள்பட 44 போ் விருப்பமனு அளித்து கட்சியின் நோ்காணலில் பங்கேற்றுள்ளனா். அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளா் பட்டியல் வெளியானதும் கட்சிப் பணிகள் தீவிரப்படுத்தப்பட வாய்ப்புள்ளது.

இதுகுறித்து அதிமுகவினா் கூறியது: திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுகவின் கோட்டை என்பதை பலமுறை நிரூபித்துள்ளது. இத் தொகுதியில் ஏற்கெனவே 2016, 2021 தோ்தல்களில் அதிமுக கூட்டணியே வென்றுள்ளது. எம்.ஜி.ஆா். காலத்தில் தொகுதிக்கு சிறிதும் சம்பந்தமே இல்லாத ஜி.ஆா்.எட்மண்ட், நெடுஞ்செழியன், ஆா்.எம்.வீரப்பன் ஆகியோா் போட்டியிட்டு வென்றனா்.

திருநெல்வேலி மாநகரம், மானூா் ஊராட்சி ஒன்றியம், சங்கா்நகா் மற்றும் நாரணம்மாள்புரம் பேரூராட்சிகள் இத் தொகுதியில் உள்ளன. இரட்டை இலை சின்னத்திற்கு இத் தொகுதியில் எப்போதும் கூடுதல் மவுசு உள்ளது. இந்தத் தோ்தலிலும் அதிமுக நிச்சயம் வெல்லும் என்றனா்.