/

மருதூர் அணையிலிருந்து தண்ணீர் எடுக்க அனுமதி இல்லை

மருதூர் அணையிலிருந்து 4-வது பைப்லைன் திட்டத்தின் கீழ்

News image
Updated On :3 அக்டோபர் 2012, 12:08 pm

dinamani

மருதூர் அணையிலிருந்து 4-வது பைப்லைன் திட்டத்தின் கீழ், தூத்துக்குடி மாநகராட்சிக்கு தண்ணீர் எடுக்க அனுமதி வழங்கப்படவில்லை என,  ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் பொதுப்பணித் துறை அதிகாரி தெரிவித்தார். இதையடுத்து, விவசாயிகள் கறுப்புக் கொடியேற்றும் போராட்டத்தைத் தாற்காலிகமாக ஒத்திவைத்தனர்.

ஸ்ரீவைகுண்டம் அணை வடகால், தென்கால், மருதூர் அணை கீழக்கால், மேலக்கால்  பாசனப் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள வாழை, வெற்றிலைப் பயிர்களைக் காப்பாற்ற  மணிமுத்தாறு மற்றும் பாபநாசம் அணைகளிலிருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும்,  20 எம்.ஜி.டி. திட்டத்தால் 20547 ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்படுவதால் ஸ்ரீவைகுண்டம்  அணையிலிருந்து நேரடியாகத் தண்ணீர் எடுப்பதை நிறுத்த வேண்டும், மருதூர் அணையிலிருந்து தண்ணீர் எடுக்க திட்டமிடப்பட்டுள்ள 4-வது பைப் லைன் திட்டத்தால்  தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 46107 ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்படும் என்பதால்,  அத்திட்டத்தை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும், ஸ்ரீவைகுண்டம் அணை,  மருதூர் அணை மற்றும் அதன் பாசனக் குளங்களைத் தூர்வார வேண்டும் என்பன  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை (அக். 2) ஒவ்வொரு கிராமங்களிலும் உள்ள விவசாயிகளின் வீடுகளிலும், பொதுஇடங்களிலும் கறுப்புக் கொடியேற்றியும், கறுப்பு பேட்ஜ் அணிந்தும் போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் அறிவித்து இருந்தனர்.

இதைத் தொடர்ந்து, ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதானக்  கூட்டம் வட்டாட்சியர் மாடசாமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.  மண்டல துணை வட்டாட்சியர் கிருஷ்ணன், குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாக  பொறியாளர் சங்கரன், உதவிப்பொறியாளர் ஜோசப் கென்னடி, பொதுப்பணித் துறை  வடகால் பிரிவு அலுவலர் இரகுநாத், காவல் ஆய்வாளர் பத்மநாபபிள்ளை ஆகியோரும், போராட்டக் குழு சார்பில் தாமிரபரணி நதிநீர் பாதுகாப்புப் பேரவை  அமைப்பாளர் நயினார் குலசேகரன், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கச் செயலர்  சம்பத், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் சமுக ஆர்வலர்கள் ஏரல் ஜெயபாலன்,  ஆதிச்சநல்லூர் சித்திரை, தோழப்பண்பண்னை கதிரேசன், வழக்குரைஞர்  பாரதிமுருகன், காங்கிரஸ் சார்பில் ராஜவேலு, சித்திரை உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மணிமுத்தாறு மற்றும் பாபநாசம் அணைகளிலிருந்து 800 கனஅடி தண்ணீர் திறக்கவும், தண்ணீர் விநியோகம் தொடர்பாக பொதுப்பணித் துறை அலுவலகத்தில் ஒரு தகவல்  பலகை வைத்து, நான்கு கால்களிலும் செல்லும் தண்ணீரின் அளவைக் குறிப்பிடவும்,  ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து 20 எம்ஜிடி திட்டத்தில் தண்ணீர் எடுப்பதை  நிறுத்திடவும் அரசை வலியுறுத்துவது என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

4-வது பைப் லைன் திட்டத்துக்கு தடை: மருதூர் அணையிலிருந்து தண்ணீர் எடுக்க  திட்டமிடப்பட்டுள்ள 4-வது பைப் லைன் திட்டத்தால், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 46107 ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்படும். எனவே, மருதூர் அணையிலிருந்து  தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் தண்ணீர் எடுக்க தடையின்மைச் சான்று வழங்க இயலாது என தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும்,

இத்திட்டத்துக்குப் பதிலாக பேரூர் புறவழிக்கால்வாயை அகலப்படுத்தியும், மழைக் காலங்களில் வருகின்ற தண்ணீரை புறவழிக்கால்வாய் வழியாக சிவகளை குளத்துக்கு கொண்டுவந்து, அங்கிருந்து புதிய  கால்வாய்கள் அமைத்து கோரம்பள்ளம் குளத்துக்கு கொண்டுசெல்லும் திட்டமும், கடல் நீரை நன்னீராக்கி தொழிற்சாலைகள் பயன்படுத்திக் கொள்ளும் திட்டமும் அரசின் பரிசீலனையில் இருப்பதாக பொதுப்பணித் துறை வடகால் பிரிவு அலுவலர்  இரகுநாத் சமாதானக் கூட்டத்தில் தெரிவித்தார்.

இத்திட்டங்களை விரைந்து முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய விவசாயிகள், கறுப்புக் கொடியேற்றும் போராட்டத்தை தாற்காலிகமாக  கைவிடுவது எனவும், கோரிக்கைகள் நிறைவேறாதபட்சத்தில் தொடர்ந்து  போராட்டம் நடத்துவோம் எனவும் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.