
பாஸ்போர்ட் விவகாரம்: தூத்துக்குடி மாணவி சோபியாவின் தந்தைக்கு காவல் துறை சம்மன்
தூத்துக்குடி விமான நிலையத்தில் பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் முன் முழக்கம் எழுப்பிய சம்பவம் தொடர்பாகவும், பழைய
தூத்துக்குடி விமான நிலையத்தில் பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் முன் முழக்கம் எழுப்பிய சம்பவம் தொடர்பாகவும், பழைய பாஸ்போர்ட்டை வழங்கியது தொடர்பாகவும் கைதான ஆராய்ச்சி மாணவி சோபியாவின் தந்தைக்கு வெள்ளிக்கிழமைக்குள் (செப். 7) நேரில் ஆஜராகும்படி காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த 3 ஆம் தேதி சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் பயணம் செய்தபோது பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் முன் பாஜகவுக்கு எதிராக முழக்கம் எழுப்பிய, கனடாவில் ஆராய்ச்சி படிப்பு மேற்கொண்டு வரும் மாணவி சோபியா போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
பிறகு, உடல்நலம் பாதிக்கப்பட்டதாக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாணவி சோபியாவுக்கு, தூத்துக்குடி 3 ஆவது நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி தமிழ்ச்செல்வி செவ்வாய்க்கிழமை நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கினார். இதையடுத்து, மாணவி சோபியா வீடுதிரும்பினார்.
இதற்கிடையே, பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தூண்டுதலின் பேரில், மாணவி சோபியாவை சிலர் மிரட்டியதாக அவரது தந்தை சாமி புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மாணவி சோபியா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரது பாஸ்போர்ட்டை போலீஸார் கேட்டபோது சோபியாவின் தந்தை சாமி பழைய பாஸ்போர்ட்டை வழங்கியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மாணவி சோபியாவின் புதிய பாஸ்போர்ட்டை வழங்குமாறு கேட்டு, புதுக்கோட்டை காவல் நிலையத்தில் இருந்து தூத்துக்குடி கந்தன் காலனியில் வசித்து வரும் சோபியாவின் தந்தை சாமிக்கு போலீஸார் செவ்வாய்க்கிழமை சம்மன் அனுப்பினர். அந்த சம்மனை அவர் பெற மறுத்த நிலையில், புதன்கிழமை பெற்றுக் கொண்டார்.
அந்த சம்மனில், மாணவி சோபியாவின் புதிய பாஸ்போர்ட்டை வழங்குவது தொடர்பாக வெள்ளிக்கிழமைக்குள் (செப். 7) புதுக்கோட்டை காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வழக்குரைஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக சோபியாவின் தந்தை சாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






