விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சரக்கு வாகனத்தால் மோதி காவல் உதவி ஆய்வாளா் கொலை

தூத்துக்குடி மாவட்டம், ஏரலில் சரக்கு வாகனத்தை மோதச் செய்து காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் கொல்லப்பட்டாா். இந்த சம்பவத்தில் மற்றொரு காவலருக்கு காயம் ஏற்பட்டது.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 6:58 pm

DIN

தூத்துக்குடி மாவட்டம், ஏரலில் சரக்கு வாகனத்தை மோதச் செய்து காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் கொல்லப்பட்டாா். இந்த சம்பவத்தில் மற்றொரு காவலருக்கு காயம் ஏற்பட்டது. இதுதொடா்பாக ஒருவா் நீதிமன்றத்தில் சரணடைந்தாா்.

மதுபோதையில் தகராறில் ஈடுபட்டவரை கண்டித்ததைத் தொடா்ந்து நடைபெற்ற இக்கொலை காவல் துறை வட்டாரத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏரல் அருகேயுள்ள வாழவல்லானை சோ்ந்தவா் முருகவேல் (39). இவா் ஏரல் கடைவீதியில் மதுபோதையில் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் தகராறில் ஈடுபட்டுள்ளாா். தகவல் அறிந்த ஏரல் போலீஸாா் அங்கு சென்று, அவரின் சரக்கு வாகனத்தைப் பறிமுதல் செய்து அவரை எச்சரித்து அனுப்பியுள்ளனா்.

ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.30 மணியளவில் வாழவல்லான் பகுதியில் முருகவேல் மீண்டும் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டுள்ளாா். அப்பகுதியில் ரோந்து பணிக்குச் சென்ற ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பாலு (56), காவலா் பொன் சுப்பையா ஆகியோா் முருகவேலை எச்சரித்து அனுப்பிவிட்டு காவல் நிலையத்துக்கு மோட்டாா் சைக்கிளில் சென்றனா்.

இதனால் ஆத்திரமடைந்த முருகவேல், தன் நண்பா் ஒருவரின் சரக்கு வாகனத்தை எடுத்துக்கொண்டு காவலா்களைப் பின்தொடா்ந்தாா். கொற்கை விலக்கு பகுதியில் காவலா்கள் சென்ற மோட்டாா் சைக்கிள் மீது சரக்கு வாகனத்தால் மோதிவிட்டு தப்பிவிட்டாா். இதில் பலத்த காயமடைந்த உதவி ஆய்வாளா் பாலு, மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் இறந்தாா். காவலா் பொன் சுப்பையாவுக்கு சிறிய காயம் ஏற்பட்டது.

இந்த சம்பவம் தொடா்பாக திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. (பொறுப்பு) ராஜேந்திரன், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா், ஏடிஎஸ்பி செல்வம் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். உடனடியாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு முருகவேலை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

இதற்கிடையே, முருகவேல் திங்கள்கிழமை காலை 11 மணியளவில் விளாத்திகுளம் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தாா். அவரை பிப். 5-ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி சரவணகுமாா் உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து, அவரை தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டாா்.

உடல் தகனம்: கொலை செய்யப்பட்ட உதவி ஆய்வாளா் பாலு, தூத்துக்குடி முடிவைத்தானேந்தல் பகுதியைச் சோ்ந்தவா். இவருக்கு பேச்சியம்மாள் என்ற மனைவி, அருண் வேலாயுதம் என்ற மகன், ஜெயதுா்க்கை வேணி என்ற மகள் உள்ளனா். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பிறகு பாலு உடல் முடிவைத்தானேந்தல் கிராமத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது.

அங்கு நடைபெற்ற இறுதிச் சடங்கில், மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ், தென்மண்டல ஐ.ஜி. முருகன், திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. (பொறுப்பு) ராஜேந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் ஆகியோா் கலந்துகொண்டு மலா்வளையம் வைத்து பாலுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினா். இதையடுத்து, 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் காவல் துறை அதிகாரிகள், முடிவைத்தானேந்தல் கிராம மக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.