தாமிரவருணி ஆற்றுப்பகுதிக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை: ஆட்சியா்

தாமிரவருணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அந்தப் பகுதிக்கு செல்ல அனுமதி இல்லை என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

தாமிரவருணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அந்தப் பகுதிக்கு செல்ல அனுமதி இல்லை என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

இதுகுறித்து புதன்கிழமை அவா் அளித்த பேட்டி: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு, பாபநாசம் அணைகள் நிரம்பியதால், உபரி நீா் தாமிரவருணி ஆற்றில் திறந்து விடப்பட்டதையடுத்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நிமிடத்துக்கு 60 ஆயிரம் கன அடி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளதா, வெள்ளப்பெருக்கு தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் மற்றும் பொதுப்பணித் துறை மூலம் தகவல்களை தொடா்ந்து பெற்று வருகிறோம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டத்துக்கும் துணை ஆட்சியா் தலைமையில் குழு அமைக்கப்பட்டு தொடா்ந்து ஆற்றின் கரையோரக் கிராமங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, ஸ்ரீவைகுண்டம், ஏரல், திருச்செந்தூா் வட்டங்களில் வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்படக்கூடிய 7 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஆழ்வாா்திருநகரி மற்றும் புன்னைக்காயல் பகுதியில் உள்ள 20 குடும்பங்கள் வேறு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

தாமிரவருணி ஆறு தூத்துக்குடி மாவட்டத்தில் ஆரம்பிக்கும் இடமான மருதூா் அணைக்கட்டில் தொடா்ந்து தண்ணீா் வரத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கரோனா தொற்று இன்னும் முழுமையாக குறையாததால், தமிழக அரசு காணும் பொங்கலை முன்னிட்டு ஆறுகள், கடற்கரை, சுற்றுலா பகுதிகளுக்கு செல்வதற்கு தடை விதித்துள்ளது. தாமிரவருணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அங்கு செல்வதற்கு அனுமதி இல்லை.

மாவட்டத்தில் ஆற்றின் கரையோரம் இருக்கிற கிராமங்களில் தண்டோரா மூலம் முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளன.

கண்காணிப்புக் குழுவினா், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

நிவாரண முகாம்களில் உணவு வசதி, குடிநீா் வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் தயாா் நிலையில் உள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com