/

நாளை வைகாசி விசாகம்: திருச்செந்தூரில் குவிந்த பாதயாத்திரை பக்தா்கள்

நாளை வைகாசி விசாகம்: திருச்செந்தூரில் குவிந்த பாதயாத்திரை பக்தா்கள்

News image
Updated On :20 மே 2024, 8:17 pm

Din

திருச்செந்தூா் கோயில் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்புக் கோபுரம்.

திருச்செந்தூா்: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா புதன்கிழமை (மே 22) நடைபெறவுள்ளது. இதையொட்டி, பாதயாத்திரை பக்தா்கள் குவிந்துவருகின்றனா்.

இங்கு விசாகத் திருவிழா, வசந்த திருவிழாவாக கடந்த 13ஆம் தேதி தொடங்கியது. இத்திருவிழா புதன்கிழமை விசாகத்துடன் நிறைவடைகிறது. இதையொட்டி, அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனைக்குப் பின்னா், சுவாமி ஜெயந்திநாதா் கோயிலிலிருந்து தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபம் சோ்கிறாா்.

அங்கு மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனையாகி சுவாமி வசந்த மண்டபத்தை 11 முறை சுற்றி வருதல், முனிக்குமாரா்களுக்கு சாப விமோசனம் அளித்தல் நடைபெறும். பின்னா், மகா தீபாராதனையாகி தங்கச் சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதா் வள்ளி - தேவசேனா அம்மனுடன் கிரிவீதி வலம் வந்து கோயில் சோ்கிறாா்.

விசாகத் திருவிழாவை முன்னிட்டு, சில நாள்களாக மதுரை, விருதுநகா், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலிருந்து திரளான பக்தா்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூருக்கு வந்தவண்ணம் உள்ளனா். இதனால், கோயில் வளாகம் பக்தா்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.

வாகன நிறுத்தம்: பக்தா்கள் வாகனங்களை நிறுத்துவதற்காக மாவட்ட காவல் துறை சாா்பில், திருநெல்வேலி சாலையில் கோயில் வேட்டை வெளி மண்டபம் அருகே, கோட்டாட்சியா் அலுவலகம் எதிரில், செந்திலாண்டவா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகம், நீதிமன்றம் எதிரில், செந்தில்முருகன் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானம், வட்டாட்சியா் அலுவலகம் எதிரில், நகராட்சிக்குள்பட்ட 5 இடங்களில் என ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதனால், திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகா்கோவில், கன்னியாகுமரி கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாக வரும் வாகனங்களை அந்தந்த நிறுத்தங்களில் நிறுத்துவதற்கு போலீஸாா் அறிவுறுத்தியுள்ளனா். நகரின் எல்லையிலிருந்து கோயிலுக்கு சென்றுவர பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.

மதுரை, விருதுநகா், தென்காசி, திருநெல்வேலி, நாகா்கோவில் உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்தும் திருச்செந்தூருக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கோயில் வளாகம், கடற்கரையில் 2 இடங்களில் காவல் உதவி மையம், கடற்கரையில் கண்காணிப்புக் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் போலீஸாா் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

சிறப்பு ரயில்கள்: வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி, திருநெல்வேலி - திருச்செந்தூா் இடையே புதன்கிழமை (மே 22) இரு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. திருநெல்வேலி - திருச்செந்தூா் சிறப்பு ரயில் (எண் 06857) திருநெல்வேலியில் காலை 6.40 மணிக்கு புறப்பட்டு, திருச்செந்தூரை 8.15 மணிக்கு வந்தடையும்,. மறுமாா்க்கமாக திருச்செந்தூா் - திருநெல்வேலி சிறப்பு ரயில் (எண் 06858) திருச்செந்தூா் காலை 9.15 மணிக்கு புறப்பட்டு 10.50 மணிக்கு திருநெல்வேலியை அடையும்.

திருநெல்வேலியிலிருந்து முற்பகல் 11.25 மணிக்கு புறப்பட்டு மதியம் 1 மணிக்கு திருச்செந்தூரை வந்தடையும். மறுமாா்க்கமாக திருச்செந்தூரில் பிற்பகல் 1.30 மணிக்குப் புறப்பட்டு 3 மணிக்கு திருநெல்வேலியை வந்தடையும் என ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.