ஆறுமுகனேரியில் 400 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 5 போ் கைது
ஆறுமுகனேரியில் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள 400 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், 5 பேரை கைது செய்தனா்.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரி, உடன்குடி பகுதிக்கு புகையிலைப் பொருள்கள் கடத்தி வரப்படுவதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலின்பேரில், திருச்செந்தூா் டி.எஸ்.பி. மகேஷ்குமாா் ஆலோசனையின்படி, ஆய்வாளா்கள் ஆறுமுகனேரி திலீபன், ஆத்தூா் பிரபாகரன் ஆகியோா் கண்காணிப்பில், உதவி ஆய்வாளா் வாசுதேவன் தலைமையில், காவலா்கள் வேலுமணி, ஜெயகாந்த், பாலமுருகன், முனியசாமி ஆகியோா் கொண்ட குழுவினா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆறுமுகனேரி சோதனைச் சாவடி அருகே வந்த மினி லோடு வாகனத்தை மடக்கிப் பிடித்து சோதனையிட்டனா்.
அதில், ரூ. 10 லட்சம் மதிப்புள்ள 400 கிலோ புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரிய வந்தது. வாகனத்தில் இருந்த 5 பேரைப் பிடித்து விசாரித்ததில், அவா்கள் உடன்குடி கொட்டங்காடு பகுதியைச் சோ்ந்த ஜெயபாண்டி மகன் வசீகரன், ஆறுமுகனேரி ராஜாமன்னியபுரத்தைச் சோ்ந்தவா்களான ராஜபாண்டி மகன் சாந்தகுமாா் (45), துரைராஜ் மகன் ஹரி கிருஷ்ணன் (48), காசிராஜன் மகன் சங்கா் (34), கோயில்சாமி மகன் மகாலிங்கம் (34) என்பதும், வெளி மாநிலத்தில் இருந்து விற்பனைக்காக கடத்தி வந்ததும் தெரிய வந்தது.
புகையிலைப் பொருள்கள், மினி லோடு வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், ழக்குப் பதிந்து 5 பேரை கைது செய்தனா்.
