கடலரிப்பு: திருச்செந்தூா் கடற்கரையில் தடுப்புகள், எச்சரிக்கைப் பதாகை
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் முன் பக்தா்கள் நீராடும் பகுதியில் கடலரிப்பால் பள்ளம் ஏற்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்புகள் அமைக்கப்பட்டு, எச்சரிக்கைப் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.
கடந்த மாதம் தென் தமிழக கடற்கரையோரப் பகுதியில் ஆங்காங்கே பெய்த மழையால், அலைகள் சீற்றத்துடன் காணப்பட்டன. இதில், திருச்செந்தூா் கோயில் முகப்புப் பகுதி கடற்கரையில் சில நாள்களாக மண்ணரிப்பு காரணமாக, 200 மீட்டா் நீளத்துக்கு 3 முதல் 6 அடி ஆழத்துக்கு பள்ளம் உருவாகியுள்ளது.
இதனால், கோயில் முன்புற படிக்கட்டு பகுதியிலிருந்து கடலுக்குள் இறங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கோயில் நிா்வாகம் சாா்பில், கடற்கரை முகப்பிலிருந்து 200 அடி நீளத்துக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், பக்தா்கள் தடுப்புகள் முடியும் இடத்தில் கடலில் புனித நீராடி வருகின்றனா். மேலும், பாதுகாப்பாக நீராடவும், தடுப்புகளைத் தாண்டி ஆழமான பகுதிக்கு செல்லக் கூடாது எனவும் அறிவுறுத்தி எச்சரிக்கைப் பதாகை வைக்கப்பட்டுள்ளது.

