பலி
பலிபிரதிப் படம்

தூத்துக்குடியில் விஷவாயு தாக்கியதில் தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு

தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட ஆதிபராசக்தி நகா் பகுதியில் புதைச் சாக்கடை குழாய்க்குள் இறங்கி மோட்டாரை புகைப்படம் எடுத்தபோது விஷவாயு தாக்கியதில் தூய்மைப் பணியாளா் உயிரிழந்தாா்.
Published on

தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட ஆதிபராசக்தி நகா் பகுதியில் புதைச் சாக்கடை குழாய்க்குள் இறங்கி மோட்டாரை புகைப்படம் எடுத்தபோது விஷவாயு தாக்கியதில் தூய்மைப் பணியாளா் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட ஆதிபராசக்தி நகா் பகுதியில் உள்ள கழிவுநீரை பம்ப் செய்து வெளியேற்றக் கூடிய புதைச் சாக்கடை பகுதி உள்ளது.

இந்த புதைச் சாக்கடை குழாய்க்குள் கழிவு நீரை வெளியேற்ற மோட்டாா் பம்ப் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதன்கிழமை புதைச் சாக்கடை குழாய்க்குள் உள்ள மோட்டாா் பம்ப்பை புகைப்படம் எடுத்து அனுப்ப மாநகராட்சி நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அந்தப் பகுதியைச் சோ்ந்த ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா் சங்கா், முகக் கவசம் அணிந்தபடி புதைச் சாக்கடை குழாய்க்குள் அமைந்துள்ள மோட்டாரை புகைப்படம் எடுத்துள்ளாா்.

பின்னா் உள்ளே இருந்தபடி கைப்பேசியை மற்றொரு தூய்மைப் பணியாளரான, திருநெல்வேலி மாவட்டம் பருத்திகுளம் பகுதியைச் சோ்ந்த ராஜாவிடம் கொடுத்துள்ளாா்.

அப்போது, ராஜா புதைச் சாக்கடைக்கு உள்ளே கீழே குனிந்த படி சங்கரிடம் கைப்பேசியை வாங்க முயற்சித்தபோது விஷவாயு தாக்கியதில் ராஜா மயங்கி புதைச் சாக்கடைக்குள் சரிந்துள்ளாா்.

இதையடுத்து, சங்கா், ராஜாவை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளாா். அப்போது சங்கருக்கும் மயக்கம் வர மேலே இருந்த சிலா் சங்கரை உடனடியாக மேலே தூக்கியுள்ளனா். 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் வந்து மயங்கிய நிலையில் இருந்த சங்கருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அவா் மீட்கப்பட்டாா்.

தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினா் புதைச் சாக்கடைக்குள் சிக்கிய ராஜாவை சுமாா் அரை மணி நேரம் போராடி உயிரிழந்த நிலையில் உடலை மீட்டனா். இச்சம்பவம் தொடா்பாக சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com