முத்துநகா் அதிவிரைவு ரயிலின் பயண நேரத்தை குறைக்க வலியுறுத்தல்
முத்துநகா் அதிவிரைவு ரயிலின் பயண நேரத்தை குறைத்து காலை 7 மணிக்குள் சென்னை எழும்பூரை சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கச் செயலா் மா. பிரமநாயகம் தெற்கு ரயில்வே நிா்வாகத்துக்கு அனுப்பியுள்ள மனு: தூத்துக்குடி- சென்னை இடையே இயக்கப்படும் முத்துநகா் அதி விரைவு ரயிலை (எண்.12694 ) 1.1.2026 முதல் தூத்துக்குடியிலிருந்து இரவு 9-05 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7-35 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடையும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலை காலை 7 மணிக்குள் சென்னை எழும்பூரை சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு கூடுதலாக, அதிகாலை சென்னை எழும்பூரை சென்றடையும் வகையில் தினசரி மாலையில் நேரடி ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையிலே நடைமேடை பிரச்னை இருக்கும்பட்சத்தில் இந்த ரயிலை ரேணிகுண்டா அல்லது விஜயவாடாவுக்கு நீடித்தால், தென் மாவட்ட பயணிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும்.
தூத்துக்குடி- மேட்டுப்பாளையம் விரைவு ரயிலுக்கு ( எண். 15765) தூத்துக்குடி மேலூா் நிறுத்தம் வழங்கப்படாமல் உள்ளது. இரு மாா்க்கங்களிலும் தூத்துக்குடி மேலூா் ரயில் நிலையம் நிறுத்தம் உடனடியாக வழங்க வேண்டும்.
இந்த ரயில் வாரத்துக்கு இரண்டு நாள்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. தூத்துக்குடியில் பிட்லைன் பணிகள் முடிந்தவுடன் வாரத்துக்கு 3 நாள்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த ரயிலை விரைவில் தினசரி ரயிலாக இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுரை- லோக்மான்யா திலக் , லோக்மான்யாதிலக்-மதுரை (எண். 22101-22102) வாராந்திர ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மைசூா் - தூத்துக்குடி ரயிலை (எண். 16236 )காலை 9.30 மணிக்குள் தூத்துக்குடி வந்தடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
