ஆறுமுகனேரி பகுதியில் சரிவர உரம் வழங்காமல் விவசாயிகளை அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு
ஆறுமுகனேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு முறையாக உரம் வழங்காமல் உரக்கடைகள், வேளாண் கூட்டுறவு வங்கிகள் அலைக்கழிப்பதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.
ஆறுமுகனேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நல்லூா் கீழக்குளம், மேலக்குளம், ஆறுமுகனேரி பொய்யாங்குளம், நத்தக்குளம் உள்ளிட்ட பல்வேறு குளங்களின் மூலம் பாசனம் பெற்று விவசாயம் நடைபெற்று வருகிறது. இவை தாமிரவருணி ஆற்றின் கடைமடைப் பாசனத்தில் உள்ளதால், தற்போது தான் விதைப்புப் பணிகள் தொடங்கியுள்ளன. இப்பகுதி விவசாயிகள் உரங்கள், மருந்துகளை குரும்பூா், சோனகன்விளை, ஆத்தூா் பகுதிகளில் உள்ள தனியாா் கடைகளிலும், அந்தந்த பகுதிகளில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களிலும் தான் பெற முடியும்.
ஆனால், விவசாயிகள் உரக்கடைகள், கூட்டுறவு சங்கங்களை அணுகியபோது இருப்பு இல்லை எனவும், சில கடைகளில் பெரிய விவசாயிகளுக்கு மொத்தமாக விற்பனை செய்வதால் இருப்பு இருந்தும் சிறு விவசாயிகளுக்கு தர மறுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆறுமுகனேரி கூட்டுறவு வங்கியில் உரம் வழங்காமல் அலைக்கழிப்பதாகவும், நனோ யூரியா என்ற திரவ யூரியாவை கட்டாயப்படுத்தி விற்க முயல்வதாகவும், குரும்பூா் கூட்டுறவு வங்கியில் யூரியா உரத்தை அதிக விலை வைத்து விற்பதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.
இதை வேளாண் துறையினா், வருவாய்த் துறையினா் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும், இனியாவது உரிய நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கு உரங்கள் சரிவர கிடைப்பதை உறுதி செய்யும்படியும் விசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
