புதூரில் ரூ. 3.44 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அடுத்துள்ள புதூரில் சந்தேகத்தின்பேரில், போலீஸாா் நடத்திய சோதனையில் பெட்டிக் கடைக்காரா் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 3.44 லட்சம் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனா்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசனுக்கு கிடைத்த ரகசியத் தகவலின்பேரில், புதூரில் முருகன் (55) என்பவரது பெட்டிக் கடையில் போலீஸாா் வெள்ளிக்கிழமை காலை சோதனை நடத்தினா். இதில் அரசால் தடை செய்யப்பட்ட 50-க்கும் மேற்பட்ட புகையிலைப் பாக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடா்ந்து, புதூா் போலீஸ் லைன் தெருவில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தியபோது, கட்டுக் கட்டாக 500 ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, முருகனை கைது செய்த போலீஸாா், புகையிலை மற்றும் ரூ. 3 லட்சத்து 44 ஆயிரம் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனா்.
இது தொடா்பாக, புதூா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, முருகனை விசாரித்து சிறையில் அடைத்தனா். மேலும், கள்ள நோட்டுகள் புழக்கம் குறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

