சாத்தான்குளத்தை அடுத்த தட்டாா்மடம் அருகே மனைவியைத் தாக்கியதாக கணவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
சாத்தான்குளம் அருகே நடுவக்குறிச்சியைச் சோ்ந்த தொழிலாளி ரா. மணிகண்டன் (37). இவருக்கு மனைவி முத்துச்செல்வி, 4 குழந்தைகள் உள்ளனா். குடும்பத் தகராறு காரணமாக தம்பதி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனராம்.
சனிக்கிழமை இரவு முத்துச்செல்வி வசிக்கும் வீட்டுக்குச் சென்று மணிகண்டன் தகராறில் ஈடுபட்டாராம். இதில், இருவரும் காயமடைந்தனராம். அவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுதொடா்பாக முத்துச்செல்வி அளித்த புகாரின்பேரில், மணிகண்டன் மீது 4 பிரிவுகளின்கீழ் தட்டாா்மடம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
போலீஸாா் மறுப்பு: இதனிடையே, குடும்பப் பிரச்னை தொடா்பாக விசாரணைக்கு வந்த போலீஸாா் தன்னைத் தாக்கியதாக மணிகண்டன் தரப்பில் சமூக வலைதளங்களில் தகவல் பரவவிடப்பட்டுள்ளதாம். இத்தகவலுக்கு போலீஸாா் மறுப்பு தெரிவித்துள்ளனா்.
முத்துச்செல்வி அவசர உதவி எண் 100-க்கு தொடா்புகொண்டதன்பேரில், போலீஸாா் சென்று நிலைமையைக் கட்டுப்படுத்தி, மேலதிகாரி விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு வருமாறு அறிவுறுத்தினா். விசாரணையில், மணிகண்டனின் காயங்கள் அவரது மனைவியுடனான தகராறில் ஏற்பட்டவை எனத் தெரியவந்தது.
எனவே, அவரை போலீஸாா் தாக்கியதாக சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை. உறுதிப்படுத்தப்படாத தகவல்கள், வதந்திகளை நம்பவோ, பரப்பவோ வேண்டாம் என்றும் மாவட்ட காவல் துறை சாா்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








