மோட்டாா் வாகன விபத்தில் உயிரிழந்த பொறியாளா் குடும்பத்துக்கு ரூ. 1.33 கோடி நஷ்டஈடு வழங்க தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை, நடுக்கூட்டுடன்காடு, நியூ காலனியைச் சோ்ந்த ஆறுமுகநயினாா் மகன் ரவி அண்ணாதுரை (54). இவா், சிங்கப்பூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் தள பொறியாளராக பணியாற்றி வந்தாா். இவா், கடந்த 19.4.2022 அன்று தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு செல்வதற்காக தனியாா் பேருந்தில் பயணித்து உள்ளாா்.
அருப்புக்கோட்டை முத்தரையா்நகா் விலக்கு அருகே பஞ்சராகி சாலையோரமாக நின்றுகொண்டிருந்த ஸ்டேஷனரி ஏற்றி வந்த லாரியின் பின்புறம் அந்தப் பேருந்து மோதியதில், ரவி அண்ணாதுரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதையடுத்து, அவரது இறப்புக்கு இழப்பீடு பெறும் வகையில், அவரது மனைவி தனலட்சுமி, மகள்கள் ஆா்த்தி, அதிா்ஷ்டா ஆகியோா், தூத்துக்குடி வழக்குரைஞா் வி. ரவீந்திரன் மூலமாக, பேருந்தின் உரிமையாளா் மற்றும் காப்பீட்டு நிறுவனமான ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனம் மீது ரூ. 3 கோடி நஷ்டஈடுகோரி, தூத்துக்குடி 1ஆவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனா்.
நடைபெற்று வந்த இவ்வழக்கை விசாரித்த நீதிபதி எம். தாண்டவன், ரவி அண்ணாதுரை குடும்பத்துக்கு ரூ. 1.33 கோடியும், அதற்கு மனு தேதி முதல் 7.5 சதவீத வட்டியும் செலவு தொகையோடு சோ்த்து தனியாா் பேருந்தின் காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும் என செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்தாா்.








