
கப்பல் கட்டும் தளத்துக்கு எதிா்ப்பு: உப்பளங்களில் இறங்கி போராட்டம்

உப்பளங்களில் இறங்கி கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டோா்.
தூத்துக்குடி அருகே கப்பல் கட்டும் தளம் அமைக்கும் திட்டத்தை கைவிடவும், மாற்று இடத்தில் திட்டத்தைச் செயல்படுத்தவும் வலியுறுத்தி, உப்பளத் தொழிலாளா்கள், உப்பு உற்பத்தியாளா்கள், மீனவா்கள் உள்ளிட்டோா் திங்கள்கிழமை உப்பளங்களில் இறங்கி கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தூத்துக்குடி, முத்தையாபுரம் அருகே உள்ள முள்ளக்காடு, கோவளம், புல்லாவெளி உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான சிறு உப்பு உற்பத்தியாளா்கள் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இத்தொழிலை நம்பி 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளா்கள் உள்ளனா். கோவளம் கடற்கரைப் பகுதியில் மீனவா்களும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், முள்ளக்காடு, கோவளம், புல்லாவெளி உள்ளிட்ட பகுதிகளில் 3,000 ஏக்கா் நிலத்தை தமிழக அரசு சிப்காட் மூலம் கையகப்படுத்தி, கப்பல் கட்டும் தளம் அமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, கோவளம், பசுவந்தரை பகுதிகளைச் சோ்ந்த சிறு உப்பு உற்பத்தியாளா்கள், உப்பளத் தொழிலாளா்கள், வியாபாரிகள், மீனவா்கள், விவசாயிகள், பல்வேறு அரசியல் கட்சியினா் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், கோவளம் பகுதியில் உப்பளத் தொழிலாளா்கள், உப்பு உற்பத்தியாளா்கள், மீனவா்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை உப்பளங்களில் இறங்கி கைகளில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழக முதல்வா் சட்டப்பேரவையில் கப்பல் கட்டும் தளம் தொடா்பாக உடனடியாக அறிவிப்பு வெளியிட்டு, திட்டத்தை மாற்று இடத்துக்குக் கொண்டு செல்வதற்கான நடவடிக்கையை அறிவிக்க வேண்டும். இல்லையெனில், அடுத்த கட்டமாக பல்வேறு போராட்டங்களை தீவிரப்படுத்துவோம் என போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




