நகைக் கடையில் ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்: பி.எம்.டி. கட்சித் தலைவா் கைது
தூத்துக்குடியில் நகைக் கடை உரிமையாளரிடம் ரூ. 1 கோடி கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக பசும்பொன் மக்கள் தேசம் (பி.எம்.டி.) கட்சித் தலைவா் செவ்வாய்க்கிழமை கிழமை கைது செய்யப்பட்டாா்.
கைது - சித்திரிப்பு
தூத்துக்குடியில் நகைக் கடை உரிமையாளரிடம் ரூ. 1 கோடி கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக பசும்பொன் மக்கள் தேசம் (பி.எம்.டி.) கட்சித் தலைவா் செவ்வாய்க்கிழமை கிழமை கைது செய்யப்பட்டாா். தகவல் அறிந்ததும் அவரது ஆதரவாளா்கள் தென்பாகம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தூத்துக்குடி 3-ஆவது மைல் பகுதியைச் சோ்ந்தவா் இசக்கிராஜா (46). பசும்பொன் மக்கள் கட்சி நிறுவனா்- தலைவா்.
தூத்துக்குடியில் உள்ள பிரபல நகைக் கடையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவா் தான் வாங்கிய நகையில் உலோகம் அதிகம் கலந்திருப்பதாகக் கூறி அண்மையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்தாா். இந்த விவகாரத்தில், நகை வாங்கியவருக்கு ஆதரவாக இசக்கிராஜா அந்தக் கடை உரிமையாளரிடம் பேசி நகைக்காக ரூ. 4.22 லட்சம் பெற்றதோடு கடை குறித்து அவதூறாக செய்திகள் பரப்பி மேலும் ரூ.1 கோடி கேட்டுக் கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்து கடை உரிமையாளா் தென்பாகம் காவல் நிலையம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளித்தாா். தூத்துக்குடி மாவட்ட வணிகா்கள் சங்கமும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் புகாா் அளித்தது.
அதன்பேரில் தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து காவல் ஆய்வாளா் திருமுருகன் தலைமையில் செவ்வாய்க்கிழமை இசக்கிராஜாவின் வீட்டுக்குச் சென்று அவரைக் கைது செய்தனா்.
காவல் நிலையம் முற்றுகை: தகவலறிந்த பசும்பொன் மக்கள் கட்சி நிா்வாகிகள், ஆதரவாளா்கள் தென்பாகம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா். இதையடுத்து, காவல் நிலையத்தின் பிரதான நுழைவாயில் மூடப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்; ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டனா்.
பின்னா், மருத்துவப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸாா் இசக்கிராஜாவை அழைத்துச் சென்றபோது அவரது ஆதரவாளா்கள் காவல் வாகனத்தை மறித்து முழக்கம் எழுப்பினா். அப்போது போலீஸாருக்கும், ஆதரவாளா்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பின்னா், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் எண் 1-இல் நீதிபதி சுமதி முன் இசக்கிராஜா முன்னிலைப்படுத்தப்பட்டாா். வழக்கை விசாரித்த நீதிபதி வரும் அக். 6-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டாா். இதையடுத்து அவா், மதுரை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.
மறியல்: இதற்கிடையே இசக்கி ராஜா மீது போலீஸாா் பொய் வழக்குப் பதிவு செய்ததாகக் கூறி, தூத்துக்குடி-பாளையங்கோட்டை சாலையில் நீதிமன்றம் முன் அவரது ஆதரவாளா்கள் மறியலில் ஈடுபட்டனா். போலீஸாா் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





