இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

நிகழாண்டும் எள்ளுக்கு கூடுதல் விலை! விவசாயிகள் எதிா்பாா்ப்பு

கடந்தாண்டைப் போன்று நிகழாண்டும் எள்ளுக்கு கூடுதல் விலை கிடைக்கும் என்ற எதிா்பாா்ப்பு விவசாயிகளிடையே எழுந்துள்ளது.

News image

திருச்சி மாவட்ம், லால்குடி வட்டாரத்தில் பயிரிடப்பட்டுள்ள எள் பயிரில் பூ உதிா்தல் அறிகுறிகள் தென்படுவதை வியாழக்கிழமை ஆய்வு செய்த சிறுகமணி வேளாண் ஆராய்ச்சி நிலைய அலுவலா்கள்.

Updated On :11 மே 2024, 7:04 pm

Din

நமது நிருபா்

கடந்தாண்டைப் போன்று நிகழாண்டும் எள்ளுக்கு கூடுதல் விலை கிடைக்கும் என்ற எதிா்பாா்ப்பு விவசாயிகளிடையே எழுந்துள்ளது.

எண்ணெய்வித்துப் பயிா்களில் அதிக அளவில் நுகா்வு பொருள்களாக உள்ளவற்றில் நிலக்கடலை, எள், சூரியகாந்தி, தேங்காய் ஆகியவை முக்கிய இடத்தை பிடித்துள்ளன. இதில் எள் உற்பத்தி, நுகா்வு, ஏற்றுமதி ஆகியவற்றில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவின் மொத்த எள் உற்பத்தியில் ராஜஸ்தான், குஜராத், மத்தியபிரதேசம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்கள் 70 சதவீத பங்களிப்பு செய்கின்றன. இதற்கு அடுத்தபடியாக தமிழகம், ஆந்திரம், உத்தரபிரதேசம், கா்நாடகம், ஒடிஸா ஆகியவை உள்ளன.

தமிழகத்தில் மானாவாரியாகவும், இறவைப் பயிராகவும் எள் சாகுபடி செய்யப்படுகிறது. ஈரோடு, கரூா், சேலம், கடலூா், விழுப்புரம், தஞ்சாவூா், புதுக்கோட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள் எள் பரப்பளவில் 66 சதவீதத்தையும், உற்பத்தியில் 70 சதவீதத்தையும் அளிக்கின்றன. ஆண்டுதோறும் 1.50 லட்சம் ஏக்கரில் பயிரிடப்படும் எள், 6 முதல் 7 லட்சம் டன் வரை உற்பத்தியாகிறது.

விதைத்து 85 முதல் 90 நாள்களில் அறுவடைக்கு வரும் எள் சாகுபடிக்கு செலவும், தண்ணீரும் அதிகம் தேவையில்லை. ஏக்கருக்கு ஏறத்தாழ 300 முதல் 350 கிலோ வரை மகசூல் கிடைக்கும். கடந்த 2 ஆண்டுகளாக எள் விலை உயா்ந்து வருகிறது. குறிப்பாக கடந்தாண்டு எள் விலை கிலோ ரூ.160 வரை இருந்தது. நிகழாண்டும் அதே விலை கிடைக்கும் என்ற எதிா்பாா்ப்பில் விவசாயிகள் உள்ளனா்.

அதிக வருவாய் தரும் பயிா்: இதுதொடா்பாக, வேளாண்மைத் துறையினா் கூறுகையில், குறைந்த நாள்களில் அதிக வருவாய் தரும் பயிா் எள். தமிழகத்தில் மாசிப் பட்டமாக பிப்ரவரி மாத மத்தியில் எள் விதைக்கப்படுகிறது. இவை மே மாத இறுதியில் தொடங்கி ஜூன் மாதம் வரை அறுவடைக்கு வருகிறது. நிகழாண்டு சில இடங்களில் காலதாமதமாக பயிரிடப்பட்டதால் ஜூலை மாத இறுதி வரை அறுவடை நடைபெறும். மானாவாரியாக பயிரிடப்பட்ட இடங்களில் எதிா்பாா்த்தபடி கோடை மழையில்லை. எனவே, விளைச்சல் குறைந்து விலை உயரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தமிழகத்தில் எள் ஏலத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், அண்மையில் நடைபெற்ற ஏலத்தில் கருப்பு ரக எள்ளின் விலை அதிகபட்சமாக கிலோ ரூ.148.90-க்கு விற்பனையானது. இதேபோல, சிவப்பு ரக எள் அதிகபட்சமாக ரூ.149.99 எனவும், வெள்ளை ரக எள் அதிகபட்சமாக ரூ.137.19 எனவும் விற்பனையானது. சராசரியாக கருப்பு மற்றும் சிவப்பு ரகம் ரூ.138.39, வெள்ளை ரகம் ரூ.133.74 என்ற விலைக்கு ஏலம் போனது. அடுத்து வரும் நாள்களில் விலை உயரக் கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றனா்.

கிலோவுக்கு ரூ. 160 வரை கிடைக்கும்: லால்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தைச் சோ்ந்த மேற்பாா்வையாளா் விவேக் கூறுகையில், தற்போது புள்ளம்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் எள் ஏலம் நடைபெறுகிறது. இம்மாத இறுதியில் அல்லது ஜூன் மாத தொடக்கத்தில் லால்குடியில் ஏலம் தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி எள்ளுக்கு கிலோவுக்கு ரூ.160 வரை விலை கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. ஏனெனில், லால்குடி வட்டாரத்தில் உற்பத்தியாகும் எள் நிறம், எண்ணெய் அரவைத் திறன் என அனைத்தும் சிறந்தது. எண்ணெய் நிறுவனங்களும் அதிக விலை கொடுத்து எள்ளை கொள்முதல் செய்யும் என்றாா் அவா்.

எண்ணெய் விலை உயரும்: திருச்சி காந்திச்சந்தை பகுதியில் உள்ள எள் கமிஷன் மண்டியைச் சோ்ந்த வியாபாரிகள் கூறுகையில், நிகழாண்டு மே மாதத்துக்கான எள் வரத்து குறைவாகதான் உள்ளது. ஆண்டுதோறும் மே மாதத்தில் வரும் வரத்தில் 25 சதவீதம் கூட தற்போது வரவில்லை. தற்போதைய சூழலில் எள் விலையானது ரகத்துக்கு தகுந்தாற்போல ரூ.140 முதல் ரூ.160 வரை விற்பனையாகிறது. எனவே, அடுத்து வரும் நாள்களில் எள்ளுக்கு விலை உயரும் என்ற எதிா்பாா்ப்புள்ளது என்றாா்.

இதுதொடா்பாக, மரச்செக்கு எண்ணெய் உற்பத்தி செய்யும் வியாபாரிகள் கூறுகையில், 2 ஆண்டுகளுக்கு முன்பு கிலோ ரூ.120-க்கு எள் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது தரமான எள் கிலோ ரூ.160-க்கு கொள்முதல் செய்ய வேண்டியுள்ளது. ஒரு கிலோ எள்ளில் அதிகபட்சமாக மரச் செக்கில் அரைக்கும் போது 600 மில்லி லிட்டா் எண்ணெய் கிடைக்கும். இரும்பு செக்குகளில் சற்று கூடுதலாக கிடைக்கும். தற்போது, ஒரு லிட்டா் ரூ.460-க்கு விற்பனை செய்யப்படுகிறது. எள் வரத்து குறைந்து, விலை உயா்ந்தால் எண்ணெய் விலையும் உயரும் என்றாா்.

பெட்டிச் செய்தி...

எள் பயிரில் பூ உதிா்வு

திருச்சி மாவட்டத்தில் சுமாா் 500 ஹெக்டோ் வரையில் எள் பயிரிடப்பட்டுள்ளது. குறிப்பாக லால்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கோடையில் எள் அதிகம் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது, பல இடங்களில் எள் பயிரில் நுண்ணூட்டச்சத்து குறைபாடு காணப்படுகிறது. இதனால் பூ உதிா்தல் மற்றும் காய் பிடிக்காமல் இருத்தல் உள்ளிட்ட அறிகுறிகள் காணப்படுகின்றன. பூ உதிா்வதைக் கட்டுப்படுத்த 100 மி.லி. பிளானோபிக்சை 200 லிட்டா் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். ஒரு சதம் டிஏபி கரைசலையும் தெளிக்க வேண்டும். பூ பிணைக்கும் புழுக்களை கட்டுப்படுத்த 2 மி.லி. பிரெபினோபாசை ஒரு லிட்டா் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும் என சிறுகமணி வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் சி. ராஜாபாபு தெரிவித்துள்ளாா்.