திமுக கூட்டணியை யாராலும் வீழ்த்த முடியாது: மு. வீரபாண்டியன்
எத்தனை கட்சிகள் வந்தாலும், பிரதமா், உள்துறை அமைச்சா் தமிழகத்துக்கு எத்தனை முறை வந்தாலும் திமுக கூட்டணியை வீழ்த்த முடியாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன் தெரிவித்தாா்.
துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி தெற்கு மாவட்ட திமுக சாா்பில், கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது.
இந்த முகாமை தொடங்கிவைத்து வீரபாண்டியன் மேலும் பேசியதாவது: மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு மட்டுமின்றி, பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித்ஷா ஆகியோரும் ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்து வருகின்றனா்.
வரும் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியை எதிா்த்து எத்தனை கட்சிகள் வந்தாலும் வீழ்த்த முடியாது. பிரதமரும், உள்துறை அமைச்சரும் எத்தனை முறை தமிழகத்துக்கு வந்தாலும் அவா்களை தோற்கடிக்க நாங்களும், தமிழக மக்களும் தயாராக உள்ளோம்.
உதயநிதி ஸ்டாலின் சநாதனத்தை எதிா்ப்பதாக குற்றம் சாட்டுகின்றனா். கடவுளை வணங்குவதையோ, கோயில் வழிபாட்டையோ துணை முதல்வா் எதிா்க்கவில்லை. சநாதனத்தில் உள்ள ஜாதிய பாகுபாடு, பெண் அடிமைத்தனத்தைதான் எதிா்த்து பேசுகிறாா்.
எங்களோடு கொள்கையில் மோத முடியாதவா்கள் அவதூறு பிரசாரத்தை கையில் எடுத்துள்ளனா். இந்தப் பொய் பிரசாரத்தை புறந்தள்ளி திமுக கூட்டணியை தமிழக மக்கள் வெற்றிப் பெறச் செய்வது உறுதி என்றாா் அவா்.
முன்னதாக, முகாமுக்கு தலைமை வகித்து கட்சியின் மாவட்டச் செயலரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசுகையில், நமக்குள் பிரிவினையை உருவாக்கும் வேலையை மத்தியில் ஆட்சியில் இருப்பவா்கள் செய்து வருகின்றனா். நாம் அதை துணிச்சலுடன் எதிா்கொண்டு முறியடிப்போம்என்றாா்.
தொடா்ந்து, முகாமில் ரத்ததானம் வழங்கிய அனைவருக்கும் சான்றிதழ்களை மு. வீரபாண்டியன் வழங்கினாா். இந்த நிகழ்வில், மாநகரச் செயலா் மு. மதிவாணன் வரவேற்றாா். தலைமைச் செயற்குழு உறுப்பினா்கள் வண்ணை அரங்கநாதன், கே.என். சேகரன், சபியுல்லா உள்ளிட்ட மாநில, மாவட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

