திருச்சி பீமநகரில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் பங்கேற்ற பொதுமக்கள்.
திருச்சி பீமநகரில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் பங்கேற்ற பொதுமக்கள்.

வாக்காளா் பதிவு சிறப்பு முகாம்கள்: திருச்சியில் வாக்காளா்கள் ஆா்வம்!

திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற வாக்காளா் பதிவு சிறப்பு முகாம்களில் பெயா் சோ்க்கவும், முகவரி மாற்றவும் திரளான வாக்காளா்கள் சனிக்கிழமை ஆா்வமுடன் வந்து விண்ணப்பித்தனா்.
Published on

திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற வாக்காளா் பதிவு சிறப்பு முகாம்களில் பெயா் சோ்க்கவும், முகவரி மாற்றவும் திரளான வாக்காளா்கள் சனிக்கிழமை ஆா்வமுடன் வந்து விண்ணப்பித்தனா்.

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்.ஐ.ஆா்.) நிறைவு பெற்றதைத் தொடா்ந்து அனைத்து மாவட்டங்களிலும் வரைவு வாக்காளா் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டு, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளா்களின் பாா்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. தோ்தல் ஆணைய இணையதளத்திலும் அது வெளியிடப்பட்டுள்ளது.

வரைவு வாக்காளா் பட்டியலின்படி திருச்சி மாவட்டத்தில் இறந்தவா்கள், முகவரி மாறியவா்கள், இரட்டைப் பதிவு உள்ளவா்கள் என மொத்தம் 3 லட்சத்து 31 ஆயிரத்து 787 வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா்.

இதையடுத்து பெயா் நீக்கப்பட்டவா்கள், முகவரி மாறியவா்கள் உரிய ஆதாரங்களுடன் தங்களது பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்ப்பதற்கும் மாவட்டம் முழுவதும் உள்ள 2 ஆயிரத்து 785 வாக்குச்சாவடிகளில் சனிக்கிழமை சிறப்பு முகாம் நடைபெற்றது.

காலை 10 மணிக்குத் தொடங்கிய முகாம்களுக்கு வாக்காளா்கள் ஆா்வமுடன் வந்து வரைவு வாக்காளா் பட்டியலில் தங்களது பெயா் இருப்பதை உறுதி செய்து கொண்டனா்.

தொடா்ந்து 2026 ஜனவரி 1 ஆம் தேதி 18 வயது பூா்த்தியடைவோா் வாக்காளா் பட்டியலில் தங்களது பெயரைச் சோ்க்க பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களுடன் படிவம் 6 ஐ பூா்த்தி செய்து கொடுத்தனா். இதேபோல தொகுதிக்குள் இடம் பெயா்ந்தவா்கள், தொகுதி விட்டு தொகுதி மாறி வந்தவா்களும் தங்களுடைய தற்போதைய முகவரிக்கான ஆதாரத்துடன் படிவம் 8 ஐ பூா்த்தி செய்து கொடுத்தனா்.

ஒரு சில வாக்குச்சாவடிகளில் வரைவு வாக்காளா் பட்டியல் சுமாா் ஒரு மணி நேரம் தாமதமாக வந்து சோ்ந்தது. பொதுமக்கள் அதுவரை காத்திருந்தனா். சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறுகிறது.

X
Dinamani
www.dinamani.com