தமிழகத்தில் ஒரு எம்ஜிஆர்; ஒரு ஜெயலலிதா, ஒரு கருணாநிதி மட்டுமே இருக்கிறார்கள் என நம்பி வந்த மக்களை பேரதிர்ச்சிக்குள்ளாகி இருக்கின்றன கடந்த கால பேரவைத் தேர்தல்கள்.
அவர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் திடீரென அவர்கள் பெயரிலேயே பல வேட்பாளர்கள் போட்டியிடுவதைக் கண்டு வாக்காளர்கள் மட்டுமல்ல; தேர்தல் நடத்தும் அதிகாரிகளே குழம்பியுள்ளனர்.
மக்களிடையே ஆதரவைப் பெற்ற பிரபலமான வேட்பாளர் ஒருவர் களமிறங்கும்போது அவரது வெற்றியைத் தடுக்க மாற்றுக் கட்சிகளால் அதே பெயரிலான வேட்பாளர்களை சுயேச்சையாக போட்டியிட வைக்கும் உத்திதான் அது. உண்மையில், அந்த உத்தி ஒரு முறைகூட வெற்றிபெறவில்லை.
இருந்தாலும் விக்ரமாதித்தன்-வேதாளம் கதை போல விடாமுயற்சியுடன் வேட்பாளர்களிடையே பெயர் குழப்பத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் தேர்தல் அரங்கில் தொடர்ந்து அரங்கேறுகின்றன.
கடந்த 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் விருதாசலத்தில் முதன்முறையாக விஜயகாந்த் போட்டியிட்டார். அப்போது அவரது பெயரில் மட்டும் 3 சுயேச்சைகள் போட்டியிட்டனர். அது மட்டுமா... அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு. கருணாநிதி சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட போது அதே பெயரில் சுயேச்சையாக ஒருவர் களமிறக்கப்பட்டார். அந்த குழப்பங்களைக் கடந்து இருவரும் அமோக வெற்றி பெற்றனர்.
2011 தேர்தலில் ரிஷிவந்தியத்தில் விஜயகாந்த் போட்டியிட்டபோது அவரது பெயரிலேயே இன்னொரு வேட்பாளர் களமிறக்கப்பட்டார். அதையும் எதிர்கொண்டு அவர் வாகை சூடினார். ஆனால், 2016 தேர்தலில் நடந்த கதை வேறு. உளுந்தூர்பேட்டையில் அவர் வேட்புமனுத் தாக்கல் செய்தபோது கடந்த காலங்களைப் போலவே விஜயகாந்த் என்ற பெயரில் இரு சுயேச்சைகள் போட்டியிட்டனர்.
அந்தத் தேர்தலில் விஜயகாந்த் தோல்வியைத் தழுவியது மட்டுமல்லாது வைப்புத் தொகையை இழந்து மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்டார். ஆனால், அதற்கு சுயேச்சை விஜயகாந்த்துகள் காரணமில்லை. ஏனெனில் அவர்களில் ஒருவர் 872 வாக்குகளும், மற்றொருவர் 181 வாக்குகளும் மட்டுமே பெற்றனர். அன்றைய அரசியல் சூழலால் தோல்வியடைந்த விஜயகாந்த்துக்கு பெயர்க் குழப்பம் காரணமாக அமையவில்லை.
அதன் பின்னர் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற வேட்பாளராக தவெக தலைவர் விஜய் உருவெடுத்துள்ளார்.
பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் அவர் போட்டியிடுகிறார். பெரம்பூரில் மொத்தம் 66 மனுக்கள் தாக்கலாகியுள்ளன. திருச்சி கிழக்கில் அந்த எண்ணிக்கை 39-ஆக உள்ளது.
விஜயகாந்திடம் எடுபடாத அதே பெயர்க் குழப்ப ஃபார்முலா இப்போது விஜய்க்கு எதிராக முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.
பெரம்பூர் தொகுதியில் விஜய் என்ற பெயரில் இருவரும். ஜோசப் என்ற பெயரில் இருவரும் மனு தாக்கல் செய்துள்ளனர். திருச்சியிலும் அதே நிலைதான் உள்ளது.
பொதுவாக தேர்தலில் போட்டியிட அனைவருக்கும் உரிமை உண்டு என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது. ஒரே பெயரில் பல வேட்பாளர்கள் போட்டியிடுவதால் ஏற்படும் குழப்பத்தைத் தவிர்க்க புகைப்படத்துடன் கூடிய வாக்குப் பதிவு இயந்திரங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எது. எப்படியோ...விஜயகாந்தைத் தொடர்ந்து இப்போது விஜய்க்கு முன்பாகவும் விக்ரம் -வேதா கதையின் புதிய அத்தியாயம் தொடங்கியிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சென்னையில் இன்று விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து

அரசியலுக்கு வந்தபின் முதல்முறையாக... விஜய் பேட்டி ஒளிபரப்பு?

அரசியலில் விஜய் ஒரு ஜோக்கர்: ராஜேந்திர பாலாஜி
கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய்
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


