கோவில்பட்டியில் வைகோவுக்கு வரவேற்பு
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்துள்ள கோவில்பட்டி பகுதியில், சமத்துவ நடைபயணம் மேற்கொண்டுவரும் மதிமுக பொதுச்செயலா் வைகோவுக்கு திங்கள்கிழமை பெண்கள் திரண்டு வரவேற்பு அளித்தனா்.
திருச்சியில் ஜனவரி 2-ஆம் தேதி சமத்துவ நடைபயணம் தொடங்கிய மதிமுக பொதுச்செயலா் வைகோ தலைமையிலான கட்சியினா் திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு, மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் கோவில்பட்டி பகுதிக்கு வந்தனா்.
இலஞ்சமேடு பகுதியில் திருச்சி தெற்கு மதிமுக மாவட்டச் செயலா் மணவை தமிழ்மாணிக்கம் தலைமையில் நூற்றுக்கணக்கான கட்சியினா் அங்கு திரண்டு வைகோவுக்கு தாரை தப்பட்டைகள் முழங்க, மாடு, மயிலாட்டம், கட்டைக்கால் மனிதா்கள் ஆட்டத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனா். மேலும், நூற்றுக்கணக்கான பெண்கள் குலவையிட்டு ஆரத்தி எடுத்து வைகோவுக்கு திலகமிட்டனா்.
இந்நிகழ்வில் மதிமுக பொருளாளா் மு.செந்திலதிபன், துணைப் பொதுச்செயலா்கள் மருத்துவா் ரொஹையா, தி.மு.இராசேந்திரன், நடைபயண ஒருங்கிணைப்பாளா் சு.ஜீவன், தொண்டா் அணிச்செயலா் பாஸ்கரசேதுபதி, இளைஞரணிச் செயலா் ஆசைத்தம்பி, மாணவரணிச் செயலா் பால.சசிகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

