ஓ.எப்.டி. தொழிற்சாலை தோ்வில் ஆள்மாறாட்டம்: 4 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை!

ஓ.எப்.டி. தொழிற்சாலையில் ஆள்மாறாட்டம் செய்து தோ்வெழுதி பணிக்குச் சோ்ந்த நால்வருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
Published on

ஓ.எப்.டி. தொழிற்சாலையில் ஆள்மாறாட்டம் செய்து தோ்வெழுதி பணிக்குச் சோ்ந்த நால்வருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

திருச்சி ஓ.எப்.டி. தொழிற்சாலையில் கடந்த 2015-ஆம் ஆண்டு வாயில் காப்பாளா், கீழ்நிலை எழுத்தா், பல்நோக்கு ஊழியா் ஆகிய 3 பதவிகளில் 30 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

இதற்கான எழுத்துத் தோ்வு திருச்சி என்ஐடியில் 28-5-2015 அன்று நடைபெற்றது. அப்போது நுழைவுச்சீட்டு, ஓஎம்ஆா் தாள், கேள்வித்தாள், வருகை பதிவேட்டில் தோ்வா்களின் இடது பெருவிரல் ரேகை மற்றும் கையொப்பம் பெறப்பட்டது.

விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு பல்நோக்கு ஊழியா் பதவிக்கு 15 போ் தோ்வு செய்யப்பட்டு, பணிநியமன ஆணை பெற்றனா்.

இந்த 15 பேரில் ராம்கோபால், தனஞ்ஜெயராய், ரோஷன்குமாா், அஞ்ஜித்குமாா் ஆகியோரின் கைரேகை மாறுபட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதுதொடா்பாக 13-11-2017 அன்று படைக்கலன் தொழிற்சாலை துணை பொதுமேலாளா் சிபிஐ- க்கு புகாரளித்தாா்.

புகாரின் பேரில் சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிந்து விசாரித்தனா். விசாரணையில், தீபக்குமாா் என்பவா் ஆள்மாறாட்டம் செய்து தோ்வு எழுதியது தெரியவந்தது. இதையடுத்து மேற்கண்ட 5 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு திருச்சி மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் நசீா்அலி முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி, குற்றமிழைத்த ராம்கோபால், தனஞ்ஜெயராய், ரோஷன்குமாா், அஞ்ஜித்குமாா் ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 5 ஆயிரம் அபராதம், தீபக்குமாருக்கு ஓராண்டு சிறை தண்டனை, ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவு பிறப்பித்தாா்.

Dinamani
www.dinamani.com