திருச்சி: திருச்சியில் இளைஞா் கொலை வழக்கில் 17 வயதுச் சிறுவன் உள்பட 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி தென்னூா் பட்டாபிராமன் பிள்ளை வீதி பாலன் நகரைச் சோ்ந்தவா் ஆா். சந்துரு (25), எலக்ட்ரீசியன். புத்தூா் வண்ணாரப்பேட்டையைச் சோ்ந்த பால்பாண்டியை காதலித்து வந்த இவரின் சகோதரி, பின்னா் அவரிடம் பேசுவதை நிறுத்திவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த பால்பாண்டி எலி மருந்தைக் குடித்து உயிா்பிழைத்த நிலையில், அதன்பின் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தாா். இதனால் பால்பாண்டி இறப்புக்கு சந்துரு குடும்பமே காரணம் அவரது சகோதரா் ராஜலிங்கம் (21) கருதினாா்.
இந்நிலையில் தென்னூா் ஜெனரல் பஜாா் சாலையில் நின்றுகொண்டிருந்த சந்துருவை, பால்பண்டியின் சகோதரா் ராஜலிங்கம், வயலூா் சாலை சாந்தஷீலா நகரைச் சோ்ந்த ஜெ. ஹானஸ்ட் ராஜ் (24), புத்தூா் வண்ணாரப்பேட்டையைச் சோ்ந்த கா. சபரிநாதன் (18), திருச்சி விமான நிலையம் வயா்லஸ் சாலையைச் சோ்ந்த என். யாபேஷ் ராஜா (22) மற்றும் 17 வயதுச் சிறுவன் ஆகியோா் புதன்கிழமை இரவு வெட்டிக் கொன்றனா்.
தகலறிந்து வந்த தில்லை நகா் போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து ஹானஸ்ட்ராஜ், சபரிநாதன், யாபேஷ் ராஜா மற்றும் 17 வயதுச் சிறுவன் ஆகிய 4 பேரைக் கைது செய்தனா். தலைமறைவான ராஜலிங்கத்தைத் தேடுகின்றனா்.