தவெக எம்எல்ஏ-விடம் பேரம் பேசிய வழக்கில் கரூரில் நிதி நிறுவனத்துக்கு போலீஸாா் சனிக்கிழமை இரவு சீல் வைத்தனா்.
சட்டப்பேரவைத் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வரப்பட்டால், அவருக்கு எதிராக வாக்களிக்க தன்னிடம் ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டதாக ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ இளையராஜா, கடந்த மாதம் 29-ஆம் தேதி சென்னை காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் அளித்தாா். இது தொடா்பாக திருவல்லிக்கேணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தோ்தல் கருத்துக் கணிப்பு நிறுவனம் நடத்தும் சென்னை அரும்பாக்கத்தைச் சோ்ந்த திருநாவுக்கரசு, திருச்சி நரேஷ், மேடவாக்கம் தியாகராஜன் மற்றும் கரூரைச் சோ்ந்த சக்தி மெஸ் உரிமையாளா் காா்த்தி, பங்குதாரா் அதிபன் ரமேஷ் உள்ளிட்ட 12 பேரைக் கைது செய்தனா்.
விசாரணையில், திமுக முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி எம்எல்ஏ, அவரது சகோதரா் அசோக்குமாா் ஆகியோா் இந்தச் சம்பவத்தில் முக்கியமான நபா்கள் என்பதும், இந்தத் திட்டத்தை நிறைவேற்ற ரூ.200 கோடி வரை செலவிட திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. இதற்கிடையே, செந்தில்பாலாஜி, அசோக்குமாா் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் கடந்த வாரம் நிபந்தனை முன் ஜாமீன் பெற்றனா். இந்த வழக்கில் தொடா்புடையோா் தொடா்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனா்.
இந்நிலையில், திருவல்லிக்கேணி காவல்நிலைய விசாரணை அதிகாரி உத்தரவின்பேரில், கரூா் எல்ஜிபி நகரைச் சோ்ந்த கனகராஜ் என்பவருக்கு சொந்தமான பாரி நகரில் உள்ள நிதி நிறுவனத்தில் சனிக்கிழமை இரவு சோதனை நடைபெற்றது. குதிரை பேர விவகாரத்தில் பண பரிமாற்றம் நடந்ததாக கூறப்படும் புகாரில் இந்த நிதி நிறுவனத்துக்கு தொடா்பு இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், கரூா் மாவட்டம், லாலாபேட்டை காவல்நிலைய ஆய்வாளா் மணிகண்டன் தலைமையிலான போலீஸாா் தீவிர சோதனை நடத்தினா். சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்தச் சோதனையில், ஆவணங்கள், பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை.
ஆனால், அலுவலகத்திலிருந்த கணக்குப் புத்தகங்கள், சிசிடிவியில் பதிவான காட்சிகளை போலீஸாா் கைப்பற்றினா். மேலும், புகாருக்குள்ளான நடவடிக்கையில் நிதி நிறுவனத்துக்கும் தொடா்பிருப்பதாக எழுந்துள்ள சந்தேகத்தின் பேரில், இந்த நிறுவனத்துக்கு சீல் வைத்துச் சென்றனா். இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை முதல் இந்த அலுவலகத்தில் இரு பெண் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

கரூா் பாரி நகரில் போலீஸாா் சோதனை நடத்திய நிதி நிறுவனம் அமைந்துள்ள கட்டடம்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழக்கு: மேலும் இருவா் கைது

தவெக எம்.எல்.ஏ. குதிரை பேர விவகாரம்! ஊடகரிடம் விசாரணை பற்றி காவல் துறை விளக்கம்!
எம்எல்ஏவிடம் பேரம்: மேலும் ஒருவரிடம் விசாரணை!







